2014-08-22 15:28:35

கர்தினால் Szoka அவர்களின் இறப்புக்கு திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல்


ஆக.22,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டின் Detroit உயர்மறைமாநிலத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Edmund Casimir Szoka அவர்களின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருப்பீடத் தூதர் பேராயர் Carlo Maria Viganò அவர்கள் வழியாக Detroit உயர்மறைமாநிலத்தின் பேராயர் Allen H. Vigneron அவர்களுக்கு இந்த இரங்கல் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Detroit உயர்மறைமாநிலத்திற்கும், திருப்பீடத்துக்கும், வத்திக்கான் நாட்டுக்கும் கர்தினால் Edmund Szoka அவர்கள் ஆற்றியுள்ள அரும்பணிகளைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, கர்தினால் Szoka அவர்களின் ஆன்மா நிறை சாந்தியடையத் தான் செபிப்பதாகவும், அவரின் பிரிவால் வருந்தும் அனைவருக்கும் தனது செபம் நிறைந்த ஆறுதலைத் தெரிவிப்பதாகவும் அந்த தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சில காலம் நோயுற்றிருந்த 86 வயதாகும் கர்தினால் Edmund Szoka அவர்கள், 1981 முதல் 1990 வரை Detroit உயர்மறைமாநிலத்தின் பேராயராகப் பணியாற்றிய பின்னர், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரின் தலைமைப் பணிக்காலத்தில் திருப்பீடத்திலும், வத்திக்கான் நாட்டிலும் பணியாற்றியுள்ளார்.
1997ம் ஆண்டில் வத்திக்கான் நாட்டு நிர்வாகத் தலைவராகவும், 2001ம் ஆண்டில் வத்திக்கான் நாட்டுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் கர்தினால் Edmund Szoka.
கர்தினால் Edmund Szoka அவர்களின் மறைவோடு திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 211 ஆகவும், 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆகவும் மாறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.