2014-08-22 15:29:31

உக்ரேய்ன் நாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு தலத்திருஅவைத் தலைவர் வேண்டுகோள்


ஆக.22,2014. உக்ரேய்ன் நாடு தற்போது எதிர்கொள்ளும் கடும் நெருக்கடி நிலை குறித்து விளக்கியுள்ள அதேவேளை, நன்மனம்கொண்ட அனைவரும் உக்ரேய்ன் நாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார் உக்ரேய்ன் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்.
உலகின் கத்தோலிக்க ஆயர் பேரவைகள், உலகின் சமய மற்றும் மதத் தலைவர்கள் என உலகின் நன்மனம்கொண்ட அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ள உக்ரேய்ன் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைத் தலைவரான Kyiv-Halych பேராயர் Sviatoslav Shevchuk இவ்வாறு கேட்டுள்ளார்.
கடவுள் வழங்கிய மாண்பு மற்றும் சுதந்திரம் பறிபோகும் அச்சத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள பேராயரின் கடிதம், கிரிமேயா இணைக்கப்பட்டது மற்றும் நாட்டின் பிரிவினைக்காக இடம்பெறும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கையில் உக்ரேய்னின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும், மதங்களும் ஒன்றுசேர்ந்து செயல்படுவதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
கிரிமேயாவில் மக்கள் எதிர்கொள்ளும் சமயப் பாகுபாடு பற்றியும் குறிப்பிட்டுள்ள பேராயரின் கடிதம், உக்ரேய்னில் அமைதி நிலவவும், தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களைக் களையவும் திருஅவை தன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.