2014-08-22 15:27:55

ஆகஸ்ட் 23,2014. புனிதரும் மனிதரே : மன்னிப்பைக் கற்றுக் கொடுத்தவர் (St. Jane Frances de Chantal)


தனது இருபதாவது வயதில் திருமணமாகி, பல எதிர்காலக் கனவுகளுடன் கணவன் வீட்டுக்குச் சென்ற ஜேன் பிரான்சிசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கணவர் கிறிஸ்டோப் தெ ஷந்தால், கோமகன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தாலும், ஏராளமான கடன்களையும் சேமித்து வைத்திருந்தார். இவ்வளவுக்கும் ஜேனின் தந்தை, பிரான்ஸ் நாட்டின் Burgundy நாடாளுமன்றத் தலைவாக இருந்தார். ஜேன், உயர்குடியில், செல்வத்தில் மட்டுமல்லாமல் ஆழமான விசுவாசத்திலும் வளர்க்கப்பட்டிருந்ததால் புகுந்தவீட்டுக் கஷ்டங்களை எதிர்கொள்வதற்குத் துணிவைக் கொண்டிருந்தார். பணப் பிரச்சனை இருந்தபோதிலும் கிறிஸ்டோப்-ஜேன் தம்பதியர் நல்ல புரிதலுடன் வாழ்ந்து வந்தனர். ஜேனின் கணவர் கிறிஸ்டோப், 1601ம் ஆண்டில் வேட்டையின்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கிறிஸ்டோப்பின் உயிர் பிரியுமுன்னர் அவர் தன்னைச் சுட்டவரை மன்னித்ததோடு, அவரிடம், நீ எந்தத் தவறும் செய்யாதபோது, உன்னை வெறுப்பதன்மூலம் பாவம் செய்யமாட்டேன் என்று சொல்லி உயிர்விட்டார். 28 வயதில் நான்கு குழந்தைகளுடன் கைம்பெண்ணானார் ஜேன். தனது கணவரைச் சுட்டவரை மன்னிப்பதற்கு நீண்ட காலம் தனக்குள்ளே போராடினார் ஜேன். முதலில் அம்மனிதரை தெருவில் பார்த்தபோது வாழ்த்துச் சொன்னார். இந்த மனநிலை வந்தவுடன் அவரைத் தனது வீட்டுக்கு வரவேற்றார். பின்னர், அம்மனிதரின் குழந்தைக்கு ஞானத்தாயாகும் அளவுக்கு அவரோடு நல்லுறவை வளர்த்துக்கொண்டார். தனது வீட்டுக்கு வரும் ஏழைகளுக்குத் தவறாமல் உணவளித்தார் ஜேன். ஒருமுறை உணவு வாங்கியவர்கள், வீட்டைச் சுற்றிவந்து மறுமுறை வரிசையில் நின்று உணவு கேட்டாலும் முகம் சுளிக்காமல் உணவளித்தார் ஜேன். இது பற்றி ஜேனிடம் கேட்டபோது, நான் மீண்டும் மீண்டும் இறைவனிடம் அதே கோரிக்கையை வைக்கும்போது அவர் முகத்தைத் திருப்பினால் நான் என்ன செய்வேன் என்று பதில் சொன்னார். கைம்பெண் திருமதி ஜேன் தெ ஷந்தால் தனது பிள்ளைகளை வளர்த்த பின்னர், இறைஊழியத்துக்கென தன்னை அர்ப்பணித்தார். பெண்களுக்கென சந்திப்பு துறவு சபையையும் ஏற்படுத்தினார். புனித ஜேன் பிரான்சிஸ் தெ ஷந்தால், 1641ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தனது 69வது வயதில் காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.