2014-08-21 14:13:44

புனிதரும் மனிதரே : பிறந்த ஊரின் பெயர் மாறக் காரணமானவர்(Pope St Pius X )


ஜோசப் மெல்க்கியோரே சார்த்தோ என்ற திருமுழுக்குப் பெயரைக் கொண்டவர் திருத்தந்தை 10ம் பத்திநாதர். இவர் ஒரு வித்தியாசமான திருத்தந்தை, திருஅவையின் மரபைக் காப்பதில் முனைப்பாய் இருந்தவர். கருணை, நன்மைத்தனம், ஏழ்மை ஆகிய பண்புகளில் சிறந்தவராய் இருந்தார். பலரால் புனிதர் எனக் கருதப்பட்ட இவர் 1914ம் ஆண்டில் இறந்தார். ஆயினும், இவரைப் புனிதராக்க வேண்டுமென்ற பரிந்துரைகள் 1920களில் குவிந்தன. 1954ம் ஆண்டில் புனிதர் என இவர் அறிவிக்கப்பட்டார். 20ம் நூற்றாண்டில் ஞாயிறு மறையுரைகளை ஒவ்வொரு வாரமும் திருப்பலி பீடத்தில் நின்று வழங்கிய ஒரே திருத்தந்தை இவர். 1908ம் ஆண்டில் இத்தாலியின் மெசினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இத்தாலிய அரசு, நிவாரணப் பணிகளைத் தொடங்கு முன்னரே திருத்தந்தை 10ம் பத்திநாதர் அதனைத் தொடங்கினார். அப்போஸ்தலிக்க மாளிகையை அகதிகளின் தங்குமிடமாக்கினார். தனது குடும்பத்திற்காக எந்தச் சிறப்பு சலுகைகளையும் இவர் விரும்பவில்லை. இவரது சகோதரர் தபால் அலுவலகத்தில் எழுத்தராகவோ இருந்தார். இவருக்கு மிகவும் பிரியமான அருள்பணியாளரான இவரது மருமகன் ஒரு கிராமத்தில் குருத்துவப் பணியிலே இருந்தார். இவருடைய மூன்று சகோதரிகள் உரோமையில் ஏழ்மையிலே வாழ்ந்தனர். இவர் எப்பொழுதும் தனது தாழ்மையான குடும்பப் பின்னணியை மறந்ததில்லை. அதனாலே தனது மரண உயிலில், நான் ஏழையாகப் பிறந்தேன், ஏழையாக வாழ்ந்தேன், ஏழையாகவே இறக்க விரும்புகிறேன் என எழுதி வைத்தார். இவர் பிறந்த ஊரின் பெயர் இவரது இறப்புக்குப் பின்னர் இவரது பெயரால் அழைக்கப்பட்டது. 1903ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 1914ம் ஆண்டுவரை திருத்தந்தையாகப் பணியாற்றிய திருத்தந்தை 10ம் பத்திநாதர் அல்லது திருத்தந்தை 10ம் பயஸ் அவர்கள், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அனைவரும் தினமும் திருநற்கருணை அருந்தலாம், ஆனால் நோயாளிகளுக்கு விலக்கு உண்டு என அறிவித்தவர். திருநற்கருணை வாங்குவதற்கு விபரம் அறிந்திருந்தால் போதும் என்று அறிவித்தார். அதனாலே இவர் திருநற்கருணையின் திருத்தந்தை என அழைக்கப்படுகிறார். மறைக்கல்வியைத் திருத்தி அனைவருக்கும் வழங்கினார். இறையியல் வல்லுனர்களின் உதவியுடன் திருஅவை சட்டத்தைத் திருத்தியமைத்து 2414 சட்டங்களுடன் ஒரே தொகுப்பாக வெளியிட்டார். திருத்தந்தையின் தேர்வில் அரசர்கள் யாரும் தலையிடக் கூடாது என்ற புரட்சிகரமான விதிமுறையைக் கொண்டுவந்தவர் புனித திருத்தந்தை 10ம் பத்திநாதர். இவர் திருப்பலிப் பாடல்கள் பக்தி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார். இப்புனிதரின் விழா ஆகஸ்ட் 21.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.