2014-08-20 16:29:15

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


ஆக.20,2014. ஆகஸ்ட் மாதத்தின் கோடை வெயிலை முன்னிட்டு திருத்தந்தையின் புதன் மறைபோதகங்கள் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் இடம்பெற்று வருவதால், திருப்பயணிகளின் ஒரு சிறுபகுதியையே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் சந்திக்க முடிகிறது. பெரிய அளவிலான கூட்டம் அரங்கிற்கு வெளியேக் காத்திருந்து அவரைக் கண்டுவிட்டு செல்கிறது. தூர கிழக்கு நாடான கொரியாவில் தன் ஐந்து நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து திங்களன்று மாலைதான் உரோம் நகர் திரும்பியிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய பொதுமறைபோதகத்தில் அத்திருப்பயணம் குறித்தே எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
என்னுடைய அண்மை கொரியத் திருப்பயணம், மறைப்பணி ஆர்வத்தால் நிரம்பியுள்ள ஓர் இளமையான, உயிர்த்துடிப்புள்ள திருஅவையை சந்திக்க எனக்கு வாய்ப்பளித்தது. இது, தொன்மை நிறைந்த ஆசியக் கலாச்சாரத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கும் இடையேயான நல்லதொரு சந்திப்பின் தருணமாக இருந்தது. இந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தை மூன்று வார்த்தைகளில் சுருக்கி விடலாம். அவையாவன, நினைவு, சாட்சியம் மற்றும் நம்பிக்கை. பழங்கால நினைவுகள் மற்றும் நம்பிக்கையின் காவலனாக விளங்கும் திருஅவை, கடந்த காலத்திலிருந்து பெற்ற நம்பிக்கை தீபத்தை மற்றவர்களுக்கும் வழங்கி, இக்காலத்தில் அதற்கு சாட்சியாக விளங்கி, வருங்காலத்திற்கான நம்பிக்கையை அதிலிருந்து பெறுகிறது. இந்த முக்கியத்துவத்தை 124 மறைசாட்சிகள் அருளாளர்களாக அறிவிக்கப்பட்ட திருப்பலியிலும், ஆசியக்கண்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த இளையோர்களுடனான சந்திப்பிலும் காணக்கூடியதாக இருந்தது. கொரியாவில் கிறிஸ்தவம் வேரூன்றி, பின்னர் அது வளர்ந்ததற்கு முக்கியக்காரணம் பொதுநிலையினரே. இந்தப் பொதுநிலையினர், நற்செய்தியால் கவரப்பட்டு, ஆதிக்கிறிஸ்தவர்களைப்போல் ஏழைகளுடன் சரிசம மாண்பையும் ஒருமைப்பாட்டையும் கொண்டு வாழ்ந்தனர். கொரிய மக்கள் விசுவாசத்திலும் அன்பிலும் வளர்ந்து, அனைத்துப் பிரிவினைகளையும் வெற்றிகண்டு, ஒப்புரவும் நம்பிக்கையும் உள்ளடக்கிய ஒரு வருங்காலத்தை உற்று நோக்குவார்களாக. இவ்வாறு தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார்.
இந்நாளின் மறைபோதகத்தின்போது, உலகின் பலபகுதிகளில் குறிப்பாக ஈராக்கில் மத காரணங்களுக்காக துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்காக அனைவரும் செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். தனக்கு மிகவும் விருப்பமான சான் லொரென்சோ என்ற அர்ஜென்டீனிய கால்பந்தாட்ட குழு இந்த ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் முதன்மைக் குழுவாக வெற்றியடைந்திருப்பதையொட்டி அந்தக் கோப்பையுடன் தன்னைக்காண வந்திருந்த அந்தக் குழுவையும் இப்பொதுமறையுரைக்குப்பின் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பிரான்சிலிருந்து ஒரு குடும்பம் தங்கள் 6 குழந்தைகளுடனும், பொதிசுமக்கும் இரு கழுதைகளுடனும், கால் நடையாகவே உரோம் நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டுள்ளதையொட்டி, அக்குடும்பத்தையும் சந்தித்து தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். தன் குடும்பத்தில், அதாவது, தன் சகோதரன் மகன் குடும்பத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளம் குழந்தைகளும் அவர் மனைவியும் இறந்து, சகோதரன் மகனும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்காக செபித்த அனைவருக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார். தன் பொது மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.