2014-08-20 16:59:41

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரியாவில் மேற்கொண்ட பயணத்தின் விளைவுகள் - அருள் பணியாளர் லொம்பார்தி பேட்டி


ஆக.20,2014. விவிலியத்தை தன் வாழ்வாக மாற்றியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரியாவில் மக்கள் மனங்களை ஆழமாகத் தொட்டதை உணர முடிந்தது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 14, கடந்த வியாழன் முதல், 18, இத்திங்கள் முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரியாவில் மேற்கொண்ட பயணத்தின் விளைவுகளைக் குறித்து, அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
6வது ஆசிய இளையோர் மாநாட்டில் கலந்துகொண்டு, இளையோரைச் சந்திப்பதும், கொரிய மறைசாட்சிகளை முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிப்பதும் இப்பயணத்தின் முக்கிய நோக்கங்கள் என்றாலும், வட, தென் கொரிய நாடுகளுக்கிடையே ஒப்புரவை உருவாக்குவது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி பேசினார் என்பதை, அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
சிந்தனை, சொல் ஆகிய நிலைகளில் உரையாடலை மேற்கொள்ளும்போது, மனதளவிலும், உணர்வளவிலும் உரையாடல்கள் நிகழவேண்டும் என்பது ஆசியக் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய கூறு என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியது, இவ்விரு நாடுகளுக்கும் தேவையான ஒரு கருத்து என்று அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் கூறினார்.
கொரியாவில் தன் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணங்கள், ஈராக் நாட்டையே சுற்றிவந்தன என்பதை, அவர் வெளியிட்ட Twitter செய்திகளும், திருப்பலியின் செபங்களும் தெளிவாக்கின என்று அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.