2014-08-20 17:01:14

திருத்தந்தை பிரான்சிஸ், மாற்றுத் திறனாளிகளை அணைத்து ஆசீர்வதித்தது, கொரிய மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்த ஒரு காட்சி - ஆயர் Peter Kang U-il


ஆக.20,2014. கொரியாவில் 'மலர்களின் கிராமம்' என்றழைக்கப்படும் இடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்றுத் திறன் கொண்ட இளையோரை அணைத்து ஆசீர்வதித்தது, கொரிய மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்த ஒரு காட்சி என்று கொரிய ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Peter Kang U-il அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 14 முதல் 18 முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொரியாவில் மேற்கொண்ட பயணம், அந்நாட்டில் வளர்ந்துவரும் கத்தோலிக்க நம்பிக்கையை பெருமளவில் உறுதி செய்யும் ஒரு பயணமாக அமைந்தது என்று Cheju மறைமாவட்ட ஆயர் Kang U-il அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
Seoul மாநகரில் அமைந்துள்ள Kkottongnae என்ற இடத்தில், குடும்பங்களால் கைவிடப்பட்ட மாற்றுத் திறன் கொண்ட இளையோரை, ஒவ்வொருவராகச் சந்திப்பதற்கென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏனைய நிகழ்வுகளில் மாற்றங்கள் செய்து, கூடுதல் நேரம் ஒதுக்கியது, மக்கள் மனங்களில் ஆழமான பாதிப்புக்களை உருவாக்கியது என்று ஆயர் Kang U-il அவர்கள் எடுத்துரைத்தார்.
அதேபோல், Sewol உல்லாசக் கப்பல் விபத்தில் இறந்த இளையோரின் குடும்பங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அணைத்து, ஆறுதல் சொன்னதும் மக்களிடம் நேர்மறையான பாதிப்பை உருவாக்கியது என்று ஆயர் Kang U-il அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.