2014-08-20 16:56:14

ஈராக் நாட்டுப் பயணம் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது - கர்தினால் Filoni


ஆக.20,2014. திருத்தந்தையின் பெயரால் ஈராக் நாட்டிற்கு தான் வந்திருப்பது, மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு பயணம் என்றும், இதற்கு வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Fernando Filoni அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில், ஆகஸ்ட் 13, கடந்த புதன் முதல் ஈராக் நாட்டில் பயணங்கள் மேற்கொண்டு வந்தார்.
இப்பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, கர்தினால் Filoni அவர்களும், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்களும் ஈராக் அரசுத்தலைவர், Fuad Masum அவர்களை இச்செவ்வாயன்று சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் அரசுத்தலைவருக்கு எழுதியுள்ள மடலை, கர்தினால் Filoni அவர்கள் அரசுத்தலைவரிடம் அளித்தபோது, அம்மடலில் கூறப்பட்டுள்ள திருத்தந்தையின் கருத்துக்களை தான் கவனமாகப் படித்து பதில் அளிப்பதாக அரசுத்தலைவர் உறுதியளித்தார் என்று கர்தினால் Filoni அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.