2014-08-20 17:02:48

ஆஸ்திரேலியவில் விடுதலைசெய்யப்படவுள்ள சிறாரில் அனைத்துச் சிறார்களும் உள்ளடக்கப்படவில்லை'


ஆக.20,2014. ஆஸ்திரேலிய குடியேற்றதாரர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்து வயதுக்கு குறைவான இலங்கைச் சிறார் உட்பட நூற்றுக்கணக்கான சிறார்களை விடுதலை செய்வதற்கு ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.
சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் ஏறக்குறைய 150 சிறாரை விடுவிக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
பத்து வயதுக்கும் குறைவான சிறார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தற்காலிக தங்குமிட அனுமதிகள் வழங்கப்படும் என, குடியேற்றதார அமைச்சர் Scott Morrison அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனினும் ஆஸ்திரேலிய அரசின் இந்தப் புதிய கொள்கையானது, ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்து வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் மற்றும் ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்கு வெளியே பாப்வா நியூகினி மற்றும் நவ்ரூவிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறார்களுக்கும் பொருந்தாது என மனித உரிமைகள் அமைப்புகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, அகதித் தஞ்சம் கோரும் நோக்கில், படகில் வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததை அடுத்து, தஞ்சம் கோரிகள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை ஆஸ்திரேலியா மேலும் கடுமையாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : பிபிசி








All the contents on this site are copyrighted ©.