2014-08-20 16:41:22

ஆக.21,2014. புனிதரும் மனிதரே : இந்தியத் தாயைக்கொண்ட போரத்துக்கீசிய புனிதர் (St. Gonsalo Garcias)


கொன்சாலோ கார்சியாவின் இயற்பெயர் குந்தி ஸ்லாவுஸ் கார்சியா. இவர் ஒரு போர்த்துக்கீசியத் தந்தைக்கும், கொங்கணி மொழி பேசும் தாய்க்கும் பெப்ரவரி 5, 1557ல் பிறந்தார். தனது 15ம் வயதில் ஜப்பான் சென்றார். ஜப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே, இவர் பிலிப்பீன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு பொதுநிலை மறைபணியாளராய்ச் சென்றார். அங்கே பிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்டிசினால் தூண்டப்பட்டு, அச்சபையில் பொதுநிலைச் சகோதரராக சேர்ந்தார். தொழுநோயாளர்களோடு அங்கே பணியாற்றினார். மே 26, 1592ல் பிலிப்பீன்ஸ் நாட்டின் இஸ்பானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டனர் பிரான்சிஸ்கன் சபைத் துறவிகள். நான்காண்டுகள் பணிபுரிந்தபின்னர், அப்போது ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்கள் தங்கியிருந்த மியாகோ என்னும் இடத்திலிருந்த இல்லத்தில் 1596 டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
1597 சனவரி 3ல், 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.
1597 பெப்ரவரி 5ல் அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரோடு கைது செய்யப்பட்ட எல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும் வரை இறைப்புகழ் பாடிக்கொண்டே இருந்தார்.
ஜூன் 8, 1862ல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் மறைசாட்சியான இவரும் இவர் குழுவினரும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கொங்கணி மொழி பேசும் தாய்க்கு பிறந்தவரெனினும், தந்தை போர்த்துக்கீசியர் என்பதால், இவர் இந்தியப் புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருஅவையின் அதிகாரப்பூர்வ பட்டியலில் போத்துக்கீசிய புனிதராவார்.








All the contents on this site are copyrighted ©.