2014-08-20 16:49:54

அமைதி ஆர்வலர்கள் : 1947ல் நொபெல் அமைதி விருது பெற்ற FSC (Friends Service Council)


ஆக.20,2014 நண்பர்கள் என்று ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்ளும் Quakers எனப்படுபவர்கள் சமய இயக்கங்களின் உறுப்பினர்கள். இந்த இயக்கங்கள் பொதுவாக நண்பர்கள் சமயக் கழகங்கள் என அழைக்கப்படுகின்றன. “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர். அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி”(1பேதுரு 2:9) என்று புனித பேதுரு தனது முதல் திருமுகத்தில் கூறியிருப்பது, இவர்கள் இயக்கங்களின் கோட்பாடாக உள்ளது. இந்த இயக்கங்களில் மொழி, இனம், நாடு என்ற வேற்றுமையின்றி அனைத்துக் கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். 2007ம் ஆண்டில் உலக அளவில் இவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 3 இலட்சத்து 59 ஆயிரமாக இருந்தது. இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த Quakerகள் செய்த நிவாரணப் பணிகளுக்காக 1947ம் ஆண்டில் இவர்களுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. அச்சமயத்தில் FSC என்ற நண்பர்கள் தொண்டு அவையும்(Friends Service Council), AFSC என்ற அமெரிக்க நண்பர்கள் தொண்டு அவையும் (American Friends Service Committee) இவ்விருதைப் பெற்றன.
Quaker அமைப்பினர் பொதுவாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அகதிகளுக்கும் மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகின்றனர். உலக அமைதிக்காவும் குரல் கொடுக்கின்றனர். ஆகஸ்ட் 17, இஞ்ஞாயிறன்றுகூட, பிரிட்டனின் Caerleon, Newport ஆகிய நகரங்களிலுள்ள Quakerகள், Caerleonல் அமைதிக்காக ஒரு மணிநேர செப வழிபாட்டை நடத்தினர். உலகின் தீமைகளைக் களைவதற்கு ஒரு தீர்வாக, வருங்காலத்தில் இராணுவ அமைப்பை உருவாக்குவதற்கு அடுத்த மாதம் நடக்கும் மாநாட்டில் தீர்மானிக்கப்படவிருப்பதற்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்தனர். அதோடு, எண்ணற்ற ஆட்சேதத்தையும், பொருள்சேதத்தையும், அழிவுகளையும் ஏற்படுத்தியிருக்கும், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் Nato இராணுவத் தலையீட்டையும் இவர்கள் எதிர்த்துப் பேசினர்.
FFMA என்ற நண்பர்கள் வெளிநாட்டு மறைப்பணி கழகம், CIS என்ற பன்னாட்டுச் சேவைக்கான நண்பர்கள் தொண்டு அவை ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டதன் மூலம், 1927ம் ஆண்டில் FSC என்ற Friends Service Council அதாவது நண்பர்கள் தொண்டு அவை உருவானது. இந்த FSC நிலைத்த குழு பிரிட்டனில் நண்பர்கள் சமய கழகத்தின் வெளிநாட்டுப் பணிகளுக்குப் பொறுப்பேற்று நடத்தி வருகிறது. மறைப்பணி நடவடிக்கைகள், பன்னாட்டுச் சேவை, நிவாரணப் பணி ஆகிய மூன்றையும் முக்கிய கூறுகளாக எடுத்து இந்த அவை செய்து வருகின்றது. ஆனால் நிர்வாக முறைப்படி நடக்கும் வெளிநாட்டு மறைப்பணிகளோடு இந்த நண்பர்கள் தொண்டு அவையினர் வெகு காலம் தொடர்பின்றி இருந்தனர். இந்த அமைப்பினர், 1866ல் மத்திய இந்தியா, 1867ல் மடகாஸ்கர், 1886ல் மேற்கு சீனாவின் Szechwan மாநிலம், 1897க்கும் 1921க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இலங்கை போன்ற நாடுகளில் பணி செய்தனர்.
FSC நண்பர்கள் தொண்டு அவையின் இரண்டாவது நோக்கம் பன்னாட்டுச் சேவை. இந்த அவையின் உறுப்பினர்கள் தொடக்க காலங்களில், தங்களது தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்லாமல், அனைத்துலக அளவில் அமைதியையும், புரிந்துகொள்ளுதலையும் ஊக்குவிக்கும் திட்டங்களை நடத்தி வந்தனர். தொடக்க காலங்களில், ஸ்காட்லாந்து Quaker தலைவர்களில் ஒருவராக இருந்த இராபர்ட் பார்க்கிளே அவர்கள், நெதர்லாந்தின் Nijmegenல் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்திய தூதர்களுக்கு, 1678ம் ஆண்டில் ஒரு கடிதம் எழுதினார். போர் நடக்கும்போது அதன் உண்மையான காரணம் அறியப்படும்போது அமைதியை நிலைநாட்டுவதற்கான சரியான தீர்வுகளும் பரிந்துரைக்கப்பட வேண்டுமென பார்க்கிளே எழுதினார். 1910ம் ஆண்டில் Chungkingல் பன்னாட்டுச் சேவைக்கான நண்பர்கள் தொண்டு அவை ஆரம்பிக்கப்பட்டபோதும் இதே மாதிரியான பரிந்துரை முன்வைக்கப்பட்டது. இதனால் ஈர்க்கப்பட்ட பிரித்தானிய Quaker அமைப்புத் தலைவர் Carl Heath, பிரித்தானிய நண்பர்களை வைத்து, பன்னாட்டுச் சேவைக்கான நண்பர்கள் தொண்டு அவையின் பிரித்தானியக் கிளையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். இதன் மூலம் பன்னாட்டுச் சேவைக்கான நண்பர்கள் தொண்டு அவைகள் பல நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டன. அமைதியை ஏற்படுத்துவதில் இவைகள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டன. 1846ல் நார்வேயிலும், 1875ல் டென்மார்க்கிலும், 1925ல் ஜெர்மனியிலும், 1931ல் நெதர்லாந்திலும், 1933ல் பிரான்சிலும், 1935ல் சுவீடனிலும், 1944ல் சுவிட்சர்லாந்திலும் என ஐரோப்பிய நாடுகளில் இந்த அமைப்பு பரவத் தொடங்கியது.
இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனி நண்பர்கள் அவை அகதிகளுக்கு உதவியது. தென் பிரான்சிலிருந்த அகதிகள் முகாமுக்கு உதவி செய்ததுடன் இஸ்பெயினிலும் நிவாரணப் பணிகளை இது மேற்கொண்டது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலத்தில், பன்னாட்டுச் சேவைக்கான நண்பர்கள் தொண்டு அவை, போலந்து அகதிகள் மத்தியில் பணி செய்தது. மத்திய கிழக்கு, இந்தியா, சீனா, வடமேற்கு ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களிலும் இந்த அமைப்பு பணி செய்தது. பன்னாட்டு சேவை மற்றும் மறைப்பணிகள் இல்லாமல் நிவாரணப் பணிகள் நிறைவடைவதில்லை என்பதை இந்த அமைப்பினர் நம்பிப் பணிசெய்கின்றனர். ஒவ்வொரு மனித இதயத்திலும் இறைவனுக்கான சான்று உள்ளது. இறையருளால் அதை உயிரூட்டமுள்ளதாக்க முடியும் என்பது இந்த நண்பர்கள் தொண்டு அவையின் நம்பிக்கையாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.