2014-08-20 17:02:01

2013ம் ஆண்டில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த 155 பேர் கொல்லப்பட்டுள்ளனர்


ஆக.20,2014. 2013ம் ஆண்டில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த 155 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 171 பேர் காயமுற்றுள்ளனர், மற்றும் 134 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று மனிதாபிமானப் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் ஒரு மையம், இச்செவ்வாயன்று அறிக்கை விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 19, இச்செவ்வாயன்று ஐ.நா. அவையால் கடைபிடிக்கப்பட்ட உலக மனிதாபிமான நாளையொட்டி, நியூயார்க் நகரில் இயங்கிவரும் Humanitarian Outcomes Study Center, இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
மனிதாபிமானப் பணியாளர்கள், 2012ம் ஆண்டு கொல்லப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும், 2013ம் ஆண்டு, 79 பேர் கூடுதலாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்று இவ்வறிக்கை கூறியுள்ளது.
மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்படுவதும், கடத்தப்படுவதும் ஆப்கானிஸ்தானில் அதிகப்படியாக நடைபெறுகிறது என்றும், இதற்கு அடுத்தப்படியாக, பாகிஸ்தான், சூடான், தென் சூடான் ஆகிய நாடுகளில் மனிதாபிமானப் பணியாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.