2014-08-19 14:19:59

விவிலியத்
தேடல் கொடிய குத்தகைக்காரர் உவமை பகுதி - 4


RealAudioMP3 பாரிஸ் மாநகரின் சதுக்கம் ஒன்றில், ஜான் என்ற ஒரு சிறுவன், தன் தாத்தாவோடு நடந்துகொண்டிருந்தான். காலணிகள் செய்யும் ஒருவர் அச்சதுக்கத்தில் அமர்ந்திருந்தார். அவரிடம் ஒரு வாடிக்கையாளர், தன் காலணிகளை சரியாகச் செய்யவில்லை என்று கோபமாக முறையிட்டுக் கொண்டிருந்தார். வாடிக்கையாளர், காலணி செய்பவரிடம் மரியாதை குறைவான முறையில் நடந்துகொண்டார். காலணி செய்பவரோ, வாடிக்கையாளரின் கோபக் கூச்சலை அமைதியாகக் கேட்டுவிட்டு, தன் தவறை சரி செய்வதாகக் கூறினார்.
சிறுவன் ஜானும், தாத்தாவும் அந்தக் காட்சியைப் பார்த்தபின், அருகிலிருந்த ஓர் உணவகத்திற்குச் சென்றனர். உணவகத்தில் அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு அருகில், உயர் ரக உடையணிந்து ஒருவர் அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கு ஒரு பெரிய அதிகாரிபோலத் தெரிந்தது அவர் தோற்றம். உணவு பரிமாறும் பணியாள் அவரிடம் வந்து, "ஐயா, நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி வழியை மறைத்துக் கொண்டிருக்கிறது. எனவே, சிறிது உள்ளே தள்ளி அமர்கிறீர்களா?" என்று பணிவாகக் கேட்டார். அதிகாரிபோலத் தோற்றமளித்தவர், தான் சற்றும் நகரப் போவதில்லை என்று உரத்தக் குரலில் கோபமாகக் கத்தினார்.
இவ்விரு நிகழ்ச்சிகளையும் கண்ட சிறுவன் ஜானிடம் தாத்தா சொன்னார்: "ஜான், இன்று நீ கண்டவற்றை என்றும் மறவாதே. காலணி செய்பவர், தான் செய்த தவறை மற்றொருவர் சுட்டிக்காட்டியதும் அதை ஏற்றுக்கொண்டு, அதைச் சரிசெய்வதாகக் கூறினார். உணவகத்தில் நாம் பார்த்த மனிதரோ, தன் தவறை ஏற்றுக் கொள்ளவில்லை.
உலகிற்கு உபயோகமானவற்றைச் செய்பவர்கள், தங்களை உபயோகமற்றவர்களைப் போல் மற்றவர்கள் நடத்தினாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து இவ்வுலகிற்கு உபயோகமானவற்றைச் செய்கிறார்கள்.
இவ்வுலகிற்கு உபயோகமற்றவர்களோ, தங்களை மிகவும் முக்கியமானவர்கள் என்று கருதிக்கொண்டு, தங்கள் திறமையற்றதனத்தை மறைப்பதற்கு, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர்" என்று தன் பேரனுக்கு அறிவுரை சொன்னார் தாத்தா.
'The Alchemist' என்ற உலகப் புகழ்பெற்ற நாவலை எழுதிய, பிரேசில் நாட்டு Paulo Coelho என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், "The Kingdom of this World" என்ற நூலில் கூறியுள்ள கதை இது. "அதிகாரத்திற்குப் பின் இருக்கும் திறமையற்றதனம்" (Incompetence Behind Authority) என்று இக்கதைக்கு தலைப்பிட்டுள்ளார் Coelho.

'கொடிய குத்தகைக்காரர் உவமை'யை இயேசு சொல்வதற்குப் பின்னணியாக அமைந்த சூழலையும், காரணங்களையும் சென்ற விவிலியத் தேடலில் சிந்திக்க ஆரம்பித்தோம்; இன்று தொடர்கிறோம். இந்த உவமையை இயேசு சொல்வதற்கு முக்கியக் காரணம் - அவருக்கும், எருசலேம் கோவில் அதிகாரிகளுக்கும் நடந்த மோதல். இந்த மோதலில், 'அதிகாரம்' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான 'அதிகாரம்' என்றால் என்ன என்பதை இந்த மோதல் வெளிப்படுத்துகிறது. இப்பகுதியை நான் வாசித்தபோது, Paulo Coelho அவர்கள் கூறிய இச்சிறுகதை என் நினைவுக்கு வந்தது.

அமைதியை விரும்பும் அரசர்களைப் போல், கோவேறு கழுதை மீது அமர்ந்து, இயேசு எருசலேம் நகரில் நுழைந்தது, மதத் தலைவர்களை நிலைகுலையச் செய்தது. அதைத் தொடர்ந்து, தங்கள் அதிகாரக் கோட்டை என்று மதத் தலைவர்கள் கருதிவந்த எருசலேம் கோவிலுக்குள் இயேசு நுழைந்து, அங்கு அதிகாரம் செய்துவந்த வர்த்தகர்களை விரட்டியடித்தது, மதத் தலைவர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

எவ்வித அதிகார பலமோ, படைபலமோ இன்றி, தனியொரு ஆளாய் இயேசு தங்கள் கோட்டையிலேயே அத்துமீறி நுழைந்து, அதைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டதைக் கண்ட கோவில் அதிகாரிகள், இயேசுவை ஒழித்துவிட வழி தேடினர். ஆனால், மக்கள் கூட்டம் எப்போது இயேசுவைச் சுற்றியிருந்ததால், என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர் (லூக்கா 19: 47-48) என்ற கருத்தை, சென்ற விவிலியத் தேடலின் இறுதியில் கூறினோம்.

மக்கள் முன்னிலையில் இயேசுவின் மதிப்பைக் குறைப்பதற்கு, மதத் தலைவர்கள் பலமுறை முயற்சிகள் செய்தனர் என்பதை, நாம் நற்செய்திகளில் வாசிக்கிறோம். ஒவ்வொரு முறையும் அவர்கள் தங்கள் வாதங்களில் தோற்று, மக்கள் முன்னிலையில் அவமானப்பட்டுச் சென்றதையும் நாம் அறிவோம். எருசலேம் கோவிலை இயேசு தூய்மைப்படுத்தியதற்கும் அடுத்தநாள் மீண்டும் ஒருமுறை, மக்கள் முன்னிலையில் இயேசுவை மடக்கவேண்டும் என்ற முயற்சியில் மதத்தலைவர்கள் ஈடுபட்டனர். நற்செய்தியாளர் லூக்கா, 20ம் பிரிவில் கூறியுள்ள 'கொடிய குத்தகைக்காரர் உவமை'யின் அறிமுகமாக இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார்.
லூக்கா நற்செய்தி 20: 1-2
ஒருநாள் இயேசு கோவிலில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார். அவர் நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருந்தபோது தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அங்கு வந்தார்கள். அவர்கள் அவரை நோக்கி, 'எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்' என்றார்கள். என்று நற்செய்தியாளர் லூக்கா, 20ம் பிரிவைச் சுடச்சுட ஆரம்பிக்கிறார்.

'எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்' என்று மதத் தலைவர்கள் இயேசுவிடம் எழுப்பிய கேள்வி, பொதுப்படையாக ஒலிக்கிறது. 'இவற்றைச் செய்கிறீர்' என்று அவர்கள் குறிப்பிடுவது, மக்கள் கூட்டம் புடைச்சூழ, இயேசு எருசலேம் நகரில் நுழைந்ததைக் குறிப்பிடுகிறதா? இயேசு கோவிலைத் தூயமைப்படுத்தியதைக் குறிப்பிடுகிறதா? அவர் கோவிலில் அமர்ந்து மக்களுக்குக் கற்பித்ததைக் குறிப்பிடுகிறதா? அல்லது, இவை அனைத்தையும் சேர்த்துக் குறிப்பிடுகிறதா? நமக்கு இது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், உள்நோக்கத்துடன் மதத் தலைவர்கள் எழுப்பிய இக்கேள்விகளுக்கு இயேசு நேரடியாக பதில் சொல்லாமல், அவர்களிடம் மற்றொரு கேள்வியை எழுப்புகிறார். 'அதிகாரம்' என்ற கருத்தில் மதத் தலைவர்கள் கேள்வியை எழுப்பியதால், இயேசுவும், அதிகாரம் என்பதை அடிப்படையாகக் கொண்டு மறுகேள்வி கேட்கிறார்.
லூக்கா நற்செய்தி 20: 4
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, 'நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?' என்று கேட்டார்.

இயேசு எழுப்பிய இந்தப் புதிரான கேள்வியைப் புரிந்துகொள்ள, அவர் மனதில் ஓடிய எண்ணங்களுக்கு நாம் பின்வருமாறு வார்த்தைவடிவம் கொடுக்கலாம்:
“தலைவர்களே, நான் எருசலேமில் நுழைந்ததையும், கோவிலைச் சுத்தம் செய்ததையும், கோவிலில் மக்களுக்குப் போதிப்பதையும் எந்த அதிகாரத்தால் செய்கிறேன் என்று கேட்கிறீர்கள்.
எனக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என்பதை, உங்கள் கேள்வியின் வழியாக, எனக்கும், இம்மக்களுக்கும் உணர்த்த முயல்கிறீர்கள் என்பதை உணர்கிறேன். கோவில் பணியாற்றும் குருக்கள் குடும்பத்தில் நான் பிறக்கவில்லை, சட்டங்களைப் பயின்ற சட்ட அறிஞர்கள் வழிமுறையில் வந்தவன் அல்ல நான். பரிசேயர், சதுசேயர் என்ற குலங்களைச் சேர்ந்தவன் நானல்ல... பின் எனக்கு எவ்விதம் இந்த அதிகாரங்கள் வந்தன என்பதை எனக்கு இடித்துரைக்க முயல்கிறீர்கள். சரி… உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஆரோனின் வழிமரபில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குருவின் (லூக்கா 1: 5) மகனாகப் பிறந்த யோவானுக்கு, திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் விண்ணகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?”

குலம், கோத்திரம் என்ற அடிப்படையில் யோவான் பெற்றிருந்த உரிமை பெரிது என்பதை, இயேசு, இக்கேள்வி வழியே அவர்களுக்கு உணர்த்தினார். உரிமைகள் பெற்றிருந்த யோவானுக்கு எவ்வித மரியாதையும் அளிக்காமல் அவர்கள் ஒதுக்கிவைத்தனர் என்பதையும், அவர்களுக்கு மறைமுகமாக நினைவுறுத்தினார். அனைத்திற்கும் மேலாக, இறைவன் வரும் வழியை ஏற்பாடு செய்யவும், அவர் வந்ததும் அவரை உலகிற்கு அடையாளம் காட்டிவிட்டு தான் மறையவும் மட்டுமே தான் இறைவனிடமிருந்து அதிகாரம் பெற்றிருந்தோம் என்பதை யோவான் நன்கு உணர்ந்திருந்தார் என்ற பாடத்தை மதத்தலைவர்கள் மனங்களில் பதிக்க இயேசு விழைந்தார். அதற்கு நேர்மாறாக, மதத் தலைவர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொண்டிருக்கும் தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும், தாங்கள் பெற்றுள்ளதாய் நினைத்துக் கொண்டிருக்கும் அதிகாரம், இறைவனிடமிருந்து வரவில்லை என்பதை அவர்களுக்கு இடித்துரைக்கவே, இயேசு யோவானைப் பற்றிய கேள்வியை எழுப்பினார்.

இயேசு எழுப்பிய இக்கேள்வியில் பொதிந்திருந்த உண்மைகளை மதத் தலைவர்கள் உணர்ந்திருக்கவேண்டும். இருப்பினும், மக்கள் முன்பு தங்கள் அதிகாரத்தை காத்துக்கொள்ள விழைந்த தலைவர்கள், யோவானை, தங்களில் ஒருவராக எப்போதுமே எண்ணியதில்லை என்பதையும், அவரைப் பற்றி தங்களுக்கு எவ்வித கருத்தும் இல்லை என்பதையும் நேரடியாகச் சொல்லாமல், ‘யோவானுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது எனத் தெரியாது' என்று பூசி மழுப்பினார்கள். இயேசுவும் அவர்களிடம், 'எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்' என்றார். (லூக்கா 20: 7-8)

எந்தச் சூழலிலும் தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல், அந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, உண்மை என்ன என்பது தெரிந்தாலும், தெரியாததுபோல் நடித்த மதத் தலைவர்களை மனதில் கொண்டு, இயேசு 'கொடிய குத்தகைக்காரர் உவமை'யை மக்களுக்குச் சொல்ல ஆரம்பித்தார். அடுத்த வாரம் இவ்வுவமைக்குள் காலடி எடுத்து வைப்போம்.








All the contents on this site are copyrighted ©.