2014-08-19 15:47:13

நல்லதோர் உலகை அமைப்பதற்கு 500 நாள்கள் செயல்திட்டம், ஐ.நா.பொதுச் செயலர்


ஆக.19,2014. மில்லென்யம் வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கு இன்னும் 500 நாள்களே இருக்கின்றவேளை, இந்த இலக்குகளைத் தீவிரமாய்ச் செயல்படுத்துவதற்கென, 500 நாள்கள் செயல்திட்டம் ஒன்றை இத்திங்களன்று தொடங்கி வைத்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
ஆப்கான் சமூகநல ஆர்வலர் மலாலா யூசுப்சாய் அவர்கள் உட்பட 500க்கு மேற்பட்ட இளையோருடன் இந்த 500 நாள்கள் செயல்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் பான் கி மூன்.
உலக அளவில் “MDGs” என்று பரவலாக அழைக்கப்படும் இந்த மில்லென்யம் வளர்ச்சித்திட்ட இலக்குகளைச் செயல்படுத்துவதன்மூலம், 2015ம் ஆண்டையும் கடந்து உலகில் நிலையான வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளமிடவும், பல மனித உயிர்களைக் காப்பாற்றவும், நிலைத்த அமைதி மற்றும் மனித மாண்புக்கு வித்திட உதவவும் முடியும் எனக் கூறினார் பான் கி மூன்.
எட்டுக் கூறுகளைக் கொண்ட இந்த மில்லென்யம் வளர்ச்சித்திட்ட இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் அனைவரும், இந்த இலக்குகளை எட்டுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐ.நா.பொதுச் செயலர் தெரிவித்தார்.

ஆதராம் : UN







All the contents on this site are copyrighted ©.