2014-08-19 15:45:39

கொரிய மக்களுக்கு திருத்தந்தை நன்றி


ஆக.19,2014. “கொரியாவிலுள்ள எனது நண்பர்களே, உங்களுக்கு எனது நன்றி. இறைவன் விரும்பினால், நான் மிக விரைவில் ஆசியாவுக்குத் திரும்புவேன்” என, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகிற சனவரியில் இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளுக்குத் தான் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதையும் தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் 14ம் தேதி வியாழன் முதல் 18ம் தேதி இத்திங்கள் வரை தென் கொரியாவில் திருப்பயணம் கொண்டு, இத்திங்கள் மாலை 6 மணியளவில் வத்திக்கான் திரும்பினார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிநாடுகளுக்குத் திருப்பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்திக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார் என்று, பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் Georg Gaenswein அவர்கள் கூறியுள்ளார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய இரு திருத்தந்தையர்கள் குறித்து, “Kath.net” என்ற ஆஸ்ட்ரிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பேராயர் Gaenswein அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்விரு திருத்தந்தையர்க்கிடையில் நல்லதோர் உறவு நிலவுகிறது என்றும், இவ்விரு திருத்தந்தையர்கள் தொலைபேசி மூலமோ அல்லது வேறு வகையிலோ செய்திகளைப் பரிமாறிக்கொள்ள விரும்பும்போது தான் ஒரு பாலமாகச் செயல்படுவதாகவும் தெரிவித்தார் பேராயர் Gaenswein.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.