2014-08-19 15:46:20

கர்தினால் கிளீமிஸ், பிரதமர் மோடி சந்திப்பு


ஆக.19,2014. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் கிளீமிஸ் தொட்டுங்கல் அவர்கள் சந்தித்து, நாட்டில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெறும் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
இம்மாதம் 6 முதல் 8 வரை, பங்களூருவில் நடந்த இந்திய ஆயர் பேரவையின் நிலைத்த குழுவின் கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்களுக்கு நல்வாழ்த்தும், அவரின் அரசுக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்ட பின்னர், கர்தினால் கிளீமிஸ் அவர்கள் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்துள்ளார்.
நாட்டை அமைதியில் நடத்திச் செல்லவும், அனைவருக்கும் வளமான வாழ்வை அளிக்கவும் பிரதமர் மோடி அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு, இந்திய ஆயர் பேரவையின் இந்த நிலைத்த குழு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சில பகுதிகளில் இடம்பெறும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள், குறிப்பாக, சட்டீஸ்கர் மாநிலத்தின் ஐம்பது கிராமங்கள் நிறைவேற்றியுள்ள கிறிஸ்தவர்க்கெதிரான தீர்மானங்கள் குறித்து இந்திய ஆயர் பேரவையின் நிலைத்த குழு கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிறிஸ்தவ அருள்பணியாளர்கள் இக்கிராமங்களுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலஸ்தீனாவின் காசாவில் போர் முடிவுக்கு வரவும், புனித பூமியில் அமைதி நிலவவும் இந்திய ஆயர் பேரவை விண்ணப்பித்துள்ளது.

ஆதராம் : UCAN







All the contents on this site are copyrighted ©.