2014-08-19 15:47:30

ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகள் நடவேண்டும், தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


ஆக.19,2014. வளர்ச்சித் திட்டங்களை அரசு செயல்படுத்தும்போது மரங்களை வெட்ட நேர்ந்தால், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக பத்து மரக்கன்றுகளை நட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளனர் என, தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தக்கோலம் – தண்டலம் சாலையில் ஏறக்குறைய ஆயிரம் மரங்கள் இருந்தன. அவற்றில் பல மரங்கள் 150 ஆண்டுகளுக்கும் மேல் வயதுடையவை. சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அரசு அதிகாரிகள் ஏற்கனவே 700 மரங்களை வெட்டி அகற்றி விட்டனர். இந்நிலையில், மீதமுள்ள மரங்களையாவது வெட்டாமல் பாதுகாக்க வேண்டும்; மரங்கள் வெட்டப்பட்டால் அதற்கு இணையாக போதுமான எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் வழக்கறிஞர் வி.பி.சீனிவாசன்.
இந்த மனுமீது விசாரணை மேற்கொண்டதலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர், ‘வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கு ஈடாகவும் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கு ஈடாகவும் 10 மரக்கன்றுகள் நட வேண்டும். இதை அரசு அதிகாரிகள் நிறைவேற்றிவிட்டு, அது தொடர்பான நடவடிக்கை அறிக்கையை நீதிமன்றத்தில் செப்டம்பர் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். மரக் கன்றுகள் நடப்பட்டது தொடர்பான புகைப்படங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்’என்று உத்தரவிட்டுள்ளனர்.

ஆதராம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.