2014-08-18 15:38:37

தென் கொரியத் திருப்பயணம் ஆசியா, திருஅவையின் எதிர்காலம்


ஆக.18,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இந்த ஐந்து நாள் தென் கொரியத் திருப்பயணத்தில் உடனிருந்த திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் ஏழு தலைப்புகளில் இதனைத் தொகுத்தளித்துள்ளார். இந்நாள்களில் திருத்தந்தைக்கு நல்ல உடல் நலத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி. எல்லாம் சிறப்பாக அமைக்கப்பட்டு மக்களின் பங்கேற்பும் சாட்சியங்களும் சிறப்பாக இருந்தன. திருத்தந்தையும் உற்சாகத்தோடு மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டார்.
திருத்தந்தை, தென் கொரியாவிலிருந்து ஆசியாவுக்குத் திருப்பயணத்தைத் தொடங்கியுள்ளதன் மூலம் கத்தோலிக்கத் திருஅவை தனது அழைப்புக்கும், மறைப்பணிக்கும், சக்திக்கும் ஆசியாவை நோக்குகிறது என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.
இந்தப் பயணத்தின் நோக்கம், தலத்திருஅவையின் உண்மைத்தன்மையுடன் தனிப்பட்ட முறையில் அனுபவம் பெற்று அதை வலுப்படுத்துவதாக இருந்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்திருப்பயணம் அதிகமாக மேய்ப்புப்பணித் தன்மையை வெளிப்படுத்தியது.
நோயாளிகள் மற்றும் துன்புறும் குடும்பங்களைச் சந்தித்தது, சிறாரை அணைத்தது, திருமுழுக்கு வழங்கியது, இளையோரைச் சந்தித்தது, டிஜிட்டல் கைபேசிகள், புகைப்படக் கருவிகளில் selfie புகைப்படம் எடுத்தது, ஆங்கிலத்தில் பேசியது, சிறிய காரில் சென்றது, இயேசு சபை இல்லம் சென்றது, 2ம் உலகப் போரில் ஜப்பானியப் படைகளுக்குப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட பெண்களைச் சந்தித்தது, பிற கிறிஸ்தவத் தலைவர்கள், பொது நிலையினரைச் சந்தித்தது ஆகியவை, சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களை திருத்தந்தை அணுகும் முறையைத் தெளிவாகக் காட்டியது.
இத்திருப்பயணத்தின் மூலம் கொரியாவை உலகறியச் செய்துள்ளார் திருத்தந்தை. உலகளாவிய ஊடகங்கள் இந்த அப்போஸ்தலிக்கத் திருப்பயணம் பற்றி விவரித்துள்ளன. இந்தத் திருப்பயணத்தின் மூலம் விசுவாசிகளுக்கும் உலகுக்கும் செய்தியையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். உயிரைக் கொடுக்கும் அளவுக்கு விசுவாசத்துக்குத் தீவிரமாகச் சான்று பகரவும், இறைவனின் கருணையால் மக்களைக் கவரவும் ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை. விழித்தெழுங்கள், சுடர்விடுங்கள், நற்செய்தியின் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வதற்குக் கதவுகளைத் திறந்து விடுங்கள் என்ற அழைப்பையும் விசுவாசிகளுக்கும் உலகுக்கும் செய்தியையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாறு, வத்திக்கான் வானொலி இயக்குனருமான திருப்பீடச் செய்தித் தொடர்பாளருமான இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி கூறியுள்ளார்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.