2014-08-18 15:37:15

திருத்தந்தையின் தென் கொரியத் திருப்பயணத்தின் நிறைவு நாள்


ஆக.18,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அப்பயணம் பற்றிய முக்கிய எதிர்பார்ப்பு ஒன்றை ஏறக்குறைய எல்லா ஊடகங்களும் வெளியிட்டு வந்தன. அதுதான் இரு கொரிய நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் ஒப்புரவு. தென் கொரியத் தலைநகர் செயோலைப் பார்க்கும்போது இந்நாடு பொருளாதாரத்தில் வளம்கொழிக்கும் நாடு என்ற எண்ணமே அனைவருக்கும் எழுகின்றது. ஆனால் அந்நாடு தனது அண்டை நாடான வட கொரியாவுடன் எப்பொழுதும் பதட்டநிலையிலும் உள்ளது. பல காலம் அமைதியாக இருந்த கொரியாவை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பான் ஆக்ரமித்த பின்னர் பிரச்சனைகள் உருவாகின. 1910ம் ஆண்டில் ஜப்பான் கொரியாவை தன்னோடு இணைத்துக் கொண்டது. பின்னர் 1945ம் ஆண்டு ஆகஸ்டில் இரண்டாம் உலகப்போர் முடியும் வரை இந்நிலை நீடித்தது. 1945ல் ஆண்டில் கொரியாவில் ஜப்பான் படைகள் சரணடைந்தபோது, அமெரிக்க ஐக்கிய நாடும் சோவியத் யூனியனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி, அட்சரேகைப்படி, கொரியா பிரிக்கப்பட்டு அதன் தென்பகுதி அமெரிக்காவின் கீழும், வட பகுதி சோவியத் யூனியனின் கீழும் வந்தன. 1948ம் ஆண்டுக்குள் இந்த இரு வல்லரசுகளும் தங்களின் கோட்பாடுகளின்படி இரு கொரிய நாடுகளில் அரசுகளை அமைத்தன. இந்த இரு அரசுகளும், தாங்களே கொரியாவின் அதிகாரப்பூர்வமான அரசு என அறிவித்து தங்களின் எல்லைகளை ஏற்க மறுத்து வந்தன. இதனால் 1950ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் ஆதரவுடன், வட கொரியா, தென் கொரியாவை ஆக்ரமித்தது. ஐ.நா.பாதுகாப்பு அவை வடகொரியாவின் ஆக்ரமிப்பைக் கண்டித்து உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் வட கொரியா அதற்கு இணங்காததால், ஐ.நா. படைகளும் பிற நாடுகளும் தென் கொரியாவுக்கு ஆதரவாகப் போரிட்டன. இப்போர் 1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதிவரை நடந்தது. இப்போரில் எவருமே வெற்றியடையாத நிலையில், அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு கொரிய நாடுகளின் எல்லையில் நான்கு கிலோ மீட்டர் அளவு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. DMZ எனப்படும் இந்தப் பகுதியில் கண்காணிப்புக் கோபுரங்கள், படைவீரர்கள், ஆபத்தான முள்கம்பிவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவால் கொரியக் குடும்பங்கள் பிரிந்துள்ளன. கொரிய மக்கள் மத்தியில் ஒன்றிப்பு ஏக்கமும் எப்போதும் உள்ளது. எல்லையில் போர்ச் சூழலும் இருந்து கொண்டே இருக்கின்றது.
இத்திங்கள் காலை உள்ளூர் நேரம் 8.30 மணிக்கு, தான் தங்கியிருந்த செயோல் திருப்பீடத் தூதரகத்தில் உள்ளவர்களிடம் பிரியாவிடை சொல்லி அங்கிருந்து 3.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, செயோல் Myeong-dong பேராலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த அமல அன்னை பேராலயம், 1784ம் ஆண்டுவரை அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் செபிக்கும் இடமாக இருந்தது. 1950ல் வடகொரியப் படைகள் தென் கொரியாவை ஆக்ரமித்தபோது இப்பேராலயம் எண்ணற்ற அகதிகளின் புகலிடமாக மாறியது. மக்களின் நம்பிக்கையாக இருக்கின்ற இப்பேராலயத்தில் “கொரியாவில் அமைதியும் ஒப்புரவும்” என்ற தலைப்பில் திருப்பலியைத் தொடங்கு முன்னர் அந்நாட்டின் பல்சமயப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை. மேலும், இத்திருப்பலிக்கு முன்னர், அப்பேராலயத்தின் முன்னர் காத்திருந்த பாலியல் அடிமைப் பெண்கள் குழு ஒன்றை, சந்தித்து ஆசீர்வதித்து ஆறுதல் சொன்னார் திருத்தந்தை. இப்பெண்கள், இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய இராணுவத்தால் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டவர்கள்.
இத்திங்கள் காலை உள்ளூர் நேரம் 9.45 மணிக்கு செயோல் Myeong-dong அன்னைமரியா பேராலயத்தில் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் கொரிய அரசுத் தலைவர் பார்க் அவர்களும் கலந்து கொண்ட இத்திருப்பலியில், திருத்தந்தை இத்தாலிய மொழியில் மறையுரையும் ஆற்றினார்.
போர் இடம்பெறும் இடங்களில் அமைதி நிலைபெறவும், பிரிவினைகளால் துன்புறும் மக்களுக்காகவும், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்காகவும் இத்திருப்பலியில் சிறப்புச் செபங்கள் எழுப்பப்பட்டன. இத்திருப்பலி, கிறிஸ்துவின் திருச்சிலுவையை மையமாக வைத்து நடைபெற்றது. இரு கொரிய நாடுகளுக்கு இடையே நிலவும் பிரிவினையைக் குறிக்கும் விதமாக, அந்நாடுகளின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள முள்கம்பி வேலியிலிருந்து ஒரு சிறுதுண்டை எடுத்து முள்முடியாகப் பின்னி, அதை அப்பேராலய பாத்திமா அன்னை திருவுருவத்தின் பாதத்தில் வைத்திருந்தனர்.
இத்திருப்பலியை நிறைவுசெய்து அனைவரையும் ஆசீர்வதித்த திருத்தந்தை, திருப்பூட்டறையில் கொரிய ஆயர்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்தினார். செயோல் ஆயர் தலைமையகப் புதுக் கட்டடத்துக்கென ஒரு கல்லை ஆசீர்வதித்தார். ஒரு பரிசுப்பொருளையும் அளித்தார் திருத்தந்தை. பின்னர் Myeong-dong பேராலயத்திலுள்ள மறைசாட்சிகள் பீடம் சென்று செபித்தார். பின்னர் செயோல் இராணுவ விமான நிலையம் வந்து அனைத்துப் பிரதிநிதிகளையும் வாழ்த்தி நன்றி சொல்லி உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. அப்போது உள்ளூர் நேரம் இத்திங்கள் பிற்பகல் ஒரு மணி. அப்போது இந்திய இலங்கை நேரம் இத்திங்கள் காலை 9.30 மணியாக இருந்தது. இவ்விமானப் பயணத்தில் தான் கடந்து வரும் கொரியா, சீனா, மங்கோலியா, இரஷ்யா, பெலாருஸ், போலந்து, சுலோவாக்கியா, ஆஸ்ட்ரியா, சுலோவேனியா குரோவேஷியா, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு வாழ்த்துத் தந்திச் செய்திகளை அனுப்பினார். அந்நாடுகளுக்காகத் தான் செபிப்பதாகவும், மக்களுக்குத் தனது ஆசீரை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை. “ஆசிய இளையோரே! விழித்தெழுங்கள்!” என்ற தலைப்புடன் நடந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆசியத் திருப்பயணமும், 3வது வெளிநாட்டுத் திருப்பயணமுமாக அமைந்த தென் கொரியத் திருப்பயணம் இத்துடன் நிறைவுக்கு வந்தது.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.