2014-08-18 16:13:59

செயோலில் திருத்தந்தை பிரான்சிஸ் : ஒப்புரவிற்கு இட்டுச்செல்லும் கதவு மன்னிப்பே


ஆக.18,2014. என் கொரியத் திருப்பயணம் நிறைவுறும் இவ்வேளையில், இந்நாட்டின் மீது, குறிப்பாக கொரிய திருஅவையின்மீது கடவுள் அருளியுள்ள கொடைகளுக்கு நன்றி கூற விழைகிறேன். இந்த கொடைகளுள் சிறப்பானதாக, ஆசிய இளையோருடன் இடம்பெற்ற சந்திப்பு அனுபவத்தை என் மனதில் தாங்கிச் செல்கிறேன். இயேசுவின்மீது அவர்கள் கொண்டுள்ள அன்பும், நற்செய்தியை அறிவிப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வமும் அனைவருக்கும் தூண்டுதலாக உள்ளன. என் திருப்பயணத்தின் இறுதிக்கட்டமான இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில் அமைதி மற்றும் ஒப்புரவு எனும் கொடைக்காக இறைவனை வேண்டுகிறோம். கொரிய தீபகற்பத்தில் இந்த செபவேண்டுதல் முக்கியத்துவம் நிறைந்த ஒன்று. இந்தக் கொரியக் குடும்பத்தில் ஒப்புரவுக்கான செபவேண்டுதலால் இத்திருப்பலி முதலும் முதன்மையுமானது. இருவர் அல்லது மூவர் ஒன்றிணைந்து செபத்தில் கேட்கும்போது அது எத்தனை வலிமையுடையது என்பதை இயேசு விவிலியத்தில் எடுத்தியம்பியுள்ளார். அவ்வாறெனில், அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் இதயம் நிறை விண்ணப்பத்தை வானகம் நோக்கி எழுப்பும்போது எவ்வளவு வலிமை நிறைந்ததாக இருக்கும்!
பேரழிவாலும் பிரிவினையாலும் சிதறிப்போயிருக்கும் மக்களுக்கு வளத்தையும் ஒன்றிப்பையும் வழங்கும் இறைவனின் வாக்குறுதியை நம் முன் வைக்கிறது இன்றைய திருப்பலியின் முதல் வாசகம். இஸ்ராயேல் மக்களைப்போல் நமக்கும் இது நம்பிக்கை நிரம்பிய வாக்குறுதி. கடவுள் நமக்காக இப்போதும் தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு வருங்காலத்தைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. கடவுளிடம் திரும்பிவந்து அவரின் கட்டளைகளுக்கு முழு இதயத்துடன் கீழ்ப்படிவதற்கு நம்மை அழைக்கும் இறைச்சட்டத்தோடு இந்த வாக்குறுதிப் பின்னிப் பிணைந்துள்ளது. ஒப்புரவு, ஒன்றிப்பு மற்றும் அமைதி எனும் இறைக்கொடைகள், மனமாற்றம் எனும் கொடையோடு, பிரிக்க முடியாதவகையில் தொடர்பு கொண்டுள்ளன. மனமாற்றம் என்பது, தனிநபர் என்ற வகையிலும், குழுவென்ற வகையிலும் நம் வாழ்க்கைப் பாதையையும் வரலாற்றுப்பாதையையும் மாற்றவல்லது.
இத்திருப்பலியில் நாம் இந்த வாக்குறுதியை கொரிய மக்களின் வரலாற்றுப் பின்னணியில் புரிந்துகொள்கிறோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பிரிவினை மற்றும் மோதலின் அனுபவம் அது. உண்மையான நீதியும் மனிதாபிமானமும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் தாங்கள் வழங்கியுள்ள பங்கு குறித்து கிறிஸ்தவர்கள் ஆய்வுச் செய்வதற்கானச் சவாலை, மனமாற்றத்திற்கான இறைவனின் அழைப்பு முன்வைக்கிறது. ஏழைகள், வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர், வேலைவாய்ப்பு அற்றோர், பெரும்பான்மையோரின் வளங்களில் பங்குபெற முடியாதோர் ஆகியோர் குறித்து நாம் எவ்வளவு தூரம் அக்கறைக் கொண்டுள்ளோம் என்பது குறித்து ஆழமாக சிந்திக்கவும் இந்த மனமாற்றத்திற்கான இறை அழைப்பு நம்மிடம் கேட்கிறது. மேலும், கிறிஸ்தவர்களாகவும், கொரியர்களாகவும் நம்மிடம் ஓர் அழைப்பை இது முன்வைக்கிறது. அதாவது, சந்தேகம், மோதல், போட்டி போன்றவற்றால் உருவான மனநிலையை மறுதலித்து, விவிலியப் படிப்பினைகளாலும் கொரிய மக்களின் பாரம்பரியப் படிப்பினைகளாலும் வடிவமைக்கப்பட்ட கலாச்சாரத்தை உருவாக்க இந்த மனமாற்ற அழைப்பு நம்மைக் கேட்கிறது.
"என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் புரிந்தால் எத்தனைமுறை மன்னிப்பது? ஏழு முறை மட்டுமா? என இயேசுவை நோக்கி தூய பேதுரு கேட்கிறார். "ஏழுமுறை மட்டுமன்று, எழுபது தடவை ஏழுமுறை" என்று உரைக்கிறார் இயேசு. இந்த அவரின் வார்த்தைகள் ஒப்புரவு மற்றும் அமைதி குறித்த இயேசுவின் செய்தியின் இதயத்தைத் தொட்டு நிற்கின்றன. 'எங்களுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பதுபோல் எங்கள் பாவங்களை மன்னித்தருளும்" என நாம் செபிக்கும் வார்த்தைகளைச் செயல்படுத்த நாம் தயாரில்லை என்றால் எவ்விதம் நாம் அமைதி மற்றும் ஒப்புரவிற்காக நேர்மையான செபத்தை எழுப்பமுடியும்?. ஒப்புரவிற்கு இட்டுச்செல்லும் கதவு என்பது மன்னிப்பே. நம் சகோதரனை மன்னிப்பதற்கான அருளையும் இயேசுவே தருகிறார். மனிதப் பார்வையில் இயலாததாக, நடைமுறைக்கு ஒவ்வாததாகத் தெரிபவைகளை, சிலுவையின் வல்லமை மூலம் பலன் தருபவைகளாக மாற்றுகிறார் இயேசு. பிரிவினைக்குப் பாலமாக, காயத்திற்கு மருந்தாக, சகோதரத்துவ அன்பின் மூலப்பிணைப்பாக இறைவல்லமையை இயேசுவின் சிலுவை வெளிப்படுத்துகின்றது. சிலுவையின் ஒப்புரவு அருளை உள்ளத்தில் வரவேற்று அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா இடங்களிலும் மன்னிப்பின் நம்பகத்தகும் சாட்சியங்களாகச் செயல்படுங்கள். இந்த மண்ணில் நீங்கள் இறையரசின் புளிக்காரமாகச் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பேச்சுவார்த்தைகளுக்கான புதிய வாய்ப்புகளுக்கும், கருத்துவேறுபாடுகளில் தீர்வுகாண்பதற்கும், உதவித் தேவைப்படுவோருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் தாராளமனப்பான்மைக்கும், அனைத்துக் கொரிய மக்களும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவும் அனைவரும் செபிப்போம். என் திருப்பயணம் வெற்றிபெற உழைத்த அனைவருக்கும் நன்றி. உறவின் பாலங்களைக் கட்டியெழுப்புங்கள். இணைக்க வாழ்வு மற்றும் அமைதியை உள்ளடக்கிய இறைவனின் வளம் நிறை ஆசீரைக் கொண்டு இப்பூமி ஒரு நாள் மகிழ்வுறும். ஆமென்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.