2014-08-17 13:56:52

தேஜோனில் திருத்தந்தை : ஆசிய ஆயர்கள் சந்திப்பில் கர்தினால் கிரேசியஸ்


ஆக.17,2014. 44 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய ஆயர்கள் சந்தித்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கின்றோம்! 1970ம் ஆண்டில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் பிலிப்பீன்சுக்குத் திருப்பயணம் மேற்கொண்டநேரம் அது. ஆசியாவிலிருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், ஏறக்குறைய 180 பேர் கூடிய நேரம் அது. இந்த மகிழ்வான அனுபவத்தால், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் ஆசீரோடு ஆசிய ஆயர்கள் கூட்டமைப்பு உருவானது. தற்போது இந்தக் கூட்டமைப்பில் 27 நாடுகளின் 19 ஆயர் பேரவைகள் உறுப்புக்களாக உள்ளன. மேலும், இன்னும் ஆயர் பேரவைகள் இல்லாத 9 தலத்திருஅவைகளும் இந்தக் கூட்டமைப்போடு தொடர்பு கொண்டுள்ளன. ஆவியில் தொடர்ந்து மறுபிறப்படையும் நம்பிக்கைகளையும் மகிழ்வுகளையும் அனுபவிக்கும் கண்டமாக உள்ளது ஆசியா. உலக மக்கள்தொகையில் 60 விழுக்காட்டினர் ஆசியாவில் உள்ளனர். இக்கண்டத்தில் பெரும்பாலானவர்கள் இளையோர். ஆசியா, பல வழிகளில் உலகின் மற்றும் திருஅவையின் எதிர்காலத்தின் மிக முக்கியமான இடமாக உள்ளது. ஆசியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உலகத் தாராளமயமாக்கல் திருஅவைக்கும் புதிய சவால்களை முன்வைத்துள்ளது. ஆசிய மக்கள், இயல்பிலே ஆன்மீகப் பண்பைக் கொண்டுள்ளபோதிலும், மதச்சார்பற்ற தன்மையும், உலகாயுதப்போக்கும் அவர்களில் ஊடுருவியுள்ளன. ஆசிய சமுதாயத்தில் ஒரு காலத்தில் மிக முக்கியமானதாக நோக்கப்பட்டதும், மிக ஆழமாக வேரூன்றப்பட்டதுமான குடும்பப் பிணைப்பு தற்போது மெது மெதுவாக அழிந்து கொண்டிருக்கின்றது. ஆசிய ஆன்மீகம் மனித வாழ்வைப் புனிதமாய் நினைத்தவேளை, தற்போது வாழ்வுக்கான அச்சுறுத்தல்கள் எழும்பி, அவை அவ்வாழ்வை பல வழிகளில் தொந்தரவு செய்கின்றன. ஆசியர்கள் சமூக வாழ்வைத் தேடி அதில் மகிழ்வு காண்பவர்கள். ஆனால் அதுவும், தற்போது வலுவான தனிமனிதக் கோட்பாடுகளின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றது. புனித ஆண்ட்ரூ கிம் தேகோன் மற்றும் அவரின் தோழர்களைக் கொண்ட அழகான இந்நாட்டில் நாம் உள்ளோம். 124 மறைசாட்சிகள் அருளாளர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த மறைசாட்சிகளின் இரத்தம் இங்கு திருஅவை வளர உதவியுள்ளது. கொரிய இளையோர் எவ்வளவு உயிர்த்துடிப்புக் கொண்டவர்கள் என்பதை ஆசிய இளையோர் தினம் காட்டியுள்ளது. இவ்வாறு உரையாற்றிய மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தையின் கொரியத் திருப்பயணத்துக்கும் அவர் கொணர்ந்துள்ள நற்செய்திக்கும் நன்றி தெரிவித்தார். திருத்தந்தை அவர்களின் இச்செய்தியை சொல்லாலும், வாழ்வாலும், பணியாலும் வெளிப்படுத்துவோம் என்று உறுதி கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியத் திருஅவையையும், அதன் தலைவர்களையும் ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.