2014-08-17 13:56:31

தென் கொரியத் திருப்பயணத்தின் மூன்றாம் நாள்


ஆக.17,2014. ஏழைகள், நோயாளிகள், கருவிலே வளரும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், அவரின் மிகுந்த பாசத்துக்குரியவர்கள் என்பதை இச்சனிக்கிழமை மாலை திருப்பயண நிகழ்வுகள் சொல்லாமல் சொல்லியுள்ளன. தென் கொரியாவில் “மலர்களின் கிராமம்” என்ற Kkottongnaeவுக்கு இச்சனிக்கிழமை மாலையில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்குள்ள ஏறக்குறைய 150 மாற்றுத்திறனாளிச் சிறார் மற்றும் வயதுவந்தோரை ஒவ்வொருவராகப் பார்த்து அவர்களுடன் பேசி அவர்கள் மீதான தனது தனிப்பட்ட அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்விடத்தில் அவர் அதிக நேரம் செலவழித்ததால் அவரது பயண நிகழ்வு சற்று தாமதமாகவே நடந்தது. மாற்றுத்திறனாளிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செலவழித்த நேரத்தை, தென்கொரியத் தினத்தாள்களும், இணைய பக்கங்களும் மறவாமல் எழுதியுள்ளன. அன்று மாலையில் துறவியரைச் சந்தித்தபோது, துறவியர் எடுத்துள்ள ஏழ்மை, கற்பு, பணிவு வார்த்தைப்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஏழ்மை, கற்பு, குழுவாழ்வு ஆகியவை மிக மிக முக்கியம் என்பதை துறவிகளிடம் அவர் எடுத்துச் சொன்னார். அன்று மாலை பொதுநிலை விசுவாசிகளிடம், ஏழைகளுக்கு உதவினால் மட்டும் போதாது, வேலையில்லாமல் இருப்போரின் மாண்பு காக்கப்படவும் கேட்டுக்கொண்டார். இவ்வாறு இச்சனிக்கிழமை நிகழ்வுகளில் தடம் பதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.