2014-08-17 13:56:41

தென் கொரியத் திருப்பயணத்தின் நான்காம் நாள் : ஆசிய ஆயர்களுடன் திருத்தந்தை


ஆக.17,2014. இஞ்ஞாயிறுன்று கொரியாவில் எப்பக்கம் திரும்பினாலும், “ஆசிய இளையோரே! எழுந்திருங்கள்!”என்ற வாசகத்தையே காண முடிந்தது. சுவரொட்டிகள், விளம்பரங்கள், இளையோரின் டி பனியன்கள், காப்பி டம்ளர்கள், கொடிகள் என எல்லாவற்றிலும் இந்த வாசகம் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. ஏனெனில் இதுதான் 6வது ஆசிய இளையோர் தின தலைப்பாகும். இஞ்ஞாயிறு, இத்தினத்தின் நிறைவு நாளும் ஆகும். இந்தியா இலங்கை என ஆசிய இளையோர் தங்களது மரபு உடைகளில் தெஜோன் மறைமாவட்டத்தின் Haemi நகரை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். கொரியாவில் மழை பெய்து கொண்டிருந்தாலும் இஞ்ஞாயிறு திருப்பயணத் திட்டங்கள் தடையின்றி நடந்தன.
இஞ்ஞாயிறு காலை உள்ளூர் நேரம் 7 மணிக்கு, செயோல் திருப்பீடத் தூதரகத்தில் Lee Ho Jin என்பவருக்கு, திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் அருளடையாளங்களை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடந்த செவோல் கப்பல் விபத்தில் பலியான Seung-hyeon என்ற இளைஞரின் தந்தை இவர். இந்நிகழ்வில் ஜின் அவர்களின் மகளும், சில குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தெஜோன் அரங்கத்தில், செவோல் கப்பல் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை, திருத்தந்தை சந்தித்தபோது, திருத்தந்தையிடமிருந்து தான் திருமுழுக்குப் பெற வேண்டுமென்ற ஆவலை வெளிப்படுத்தினார் Lee Ho Jin. அவரின் ஆவலை இஞ்ஞாயிறன்று நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீட தூதர் பேராயர் ஆஸ்வால்டு பதில்லா அவர்களும் திருத்தந்தையுடன் சேர்ந்து இந்நிகழ்வை நடத்தினார். இத்திருப்பயணத்தில், கொரிய மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக திருத்தந்தைக்கு உதவும் இயேசு சபை அருள்பணியாளர் John Chong Che-chon அவர்கள் இந்நிகழ்வை வழிநடத்தினார். இத்திருமுழுக்கில் பிரான்சிஸ் என்ற புதிய பெயரை ஏற்ற Lee Ho Jin, இந்நிகழ்வு பற்றிப் பேசியபோது, செவோல் விபத்தில் பலியானவர்கள் மீது திருத்தந்தை காட்டிய அன்பையும், நெருக்கத்தையும் உணர முடிந்தது என்று கூறினார். இந்த செவோல் விபத்தில் பலியானவர்கள் நினைவாக நடந்த 900 கிலோ மீட்டர் தூரம் திருப்பயணத்தில் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடந்தவர் Lee Ho-jin. இவர் கடந்த ஈராண்டளவாக திருமுழுக்குக்குத் தயார் செய்து வந்துள்ளார்.
இஞ்ஞாயிறு காலை உள்ளூர் நேரம் காலை 9.45 மணிக்கு, செயோல் திருப்பீடத் தூதரகத்திலிருந்து Yongsanக்குக் காரில் சென்று, பின்னர் அங்கிருந்து 102 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Haemi நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். Haemi நகர் ஆரம்பப் பள்ளியில் வரவேற்பைப் பெற்ற பின்னர், அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Haemi திருத்தலத்துக்கு உடனடியாக சென்றார் திருத்தந்தை. தெஜோன் மறைமாவட்டத்திலுள்ள இத்திருத்தலத்தை, “அறியப்படாத மறைசாட்சிகள்” திருத்தலம் எனவும் அழைக்கலாம். ஏனெனில், இங்குதான் 132 மறைசாட்சிகளில் பெரும்பாலானோர் சித்ரவதைப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். இத்திருத்தலத்தில் ஆசிய ஆயர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பில், முதலில், FABC என்ற ஆசிய ஆயர்கள் கூட்டமைப்பின் தலைவரான, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஆசிய ஆயர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
பின்னர் Haemi திருத்தல இல்லத்தில் ஆசிய ஆயர்களோடு மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய இலங்கை நேரம் இஞ்ஞாயிறு காலை 9.30 மணியாகும். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் இஞ்ஞாயிறு மாலை 3.45 மணிக்கு, இத்திருப்பயணத்தின் முத்தாய்ப்பு நிகழ்வுக்குத் தயாரானார் திருத்தந்தை.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.