2014-08-17 13:21:33

திருத்தந்தை ஆசிய ஆயர்களிடம் - உரையாடல் என்பது, ஆசியத் திருஅவையின் முக்கியப் பணியாகிறது


ஆக.17,2014. அன்பு சகோதர ஆயர்களே, கிறிஸ்துவுக்காக பலர் தங்கள் உயிரை வழங்கிய இடத்தில் நாம் கூடியிருக்கும் வேளையில், உங்களை வாழ்த்துகிறேன். கர்தினால் கிரேசியஸ் அவர்கள் அளித்த வரவேற்பிற்கும், ஆசிய ஆயர்களாகிய நீங்கள், விளிம்புகளில் வாழ்வோருக்கு செய்துவரும் பணிக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஆசியக் கண்டத்தில், உரையாடல் என்பது, ஆசியத் திருஅவையின் முக்கியப் பணியாகிறது. உரையாடலை மேற்கொள்ள ஒருவருக்குத் தேவையான அடிப்படைப் பண்பு, தன்னுடைய சுய அடையாளத்தை உணர்ந்து ஏற்றுக்கொள்வது.
கிறிஸ்தவர்களாகிய நமது சுய அடையாளத்தைத் திசை திருப்ப, இவ்வுலகம் தரும் சோதனைகள் பல உள்ளன. அவற்றில் மூன்றை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
குறிப்பிட்ட கொள்கை ஏதும் இல்லாமல், எதையும் சார்ந்திருக்கும் 'சார்பியல்வாதம்' (Relativism) என்பது, உலகம் தரும் முதல் சோதனை. சார்பியல்வாதம் என்பது வெறும் கருத்தளவில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வின் செயல்பாடுகளிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது.

கிறிஸ்தவ சுய அடையாளத்தைத் தடுமாறச் செய்யும் இரண்டாவது உலகச் சோதனை, மேற்போக்கான மனநிலை (Superficiality). கடந்து செல்லும் எதையும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் வகையில், கலாச்சாரக் கூறுகளையும், புதுப் புதுக் கருவிகளையும் உருவாக்கும் உலகப் போக்கு ஆபத்தானது. உண்மையைச் சந்திக்கவிடாமல், தப்பித்துச் செல்லும் பல வழிகளைக் காட்டும் உலகப் போக்கு, நமது மேய்ப்புப்பணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. கிறிஸ்துவில் வேரூன்றாமல், நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள், மேற்போக்கான, சமரச முயற்சிகளை மேற்கொள்ளும் ஆபத்தை உருவாக்கும்.

இவ்வுலகம் நமக்குத் தரும் மூன்றாவது சோதனை: எளிதான, விரைவான விடைகளைத் தேடுவது. நமக்குள் நாமே விடைகளைத் தேடுவதில், கிறிஸ்தவ நம்பிக்கை அடங்குவதில்லை. நம்மைத் தாண்டி வெளியேச் செல்லும் முயற்சிகளில் நம் நம்பிக்கை வெளிப்படுகிறது. இறைவனை, தனிப்பட்ட முறையில் தொழுவதில் அல்ல, மாறாக, அடுத்தவரை அன்பு செய்வதில், அவர்களுக்குப் பணியாற்றுவதில் நமது நம்பிக்கை அடங்கியுள்ளது. கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையே, நமது சுய அடையாளம். இதிலிருந்து ஆரம்பமாவது, நமது உரையாடல்.
இறுதியாக, உரையாடல் என்பது, நமது பரிவுகாட்டும் சக்தியில் வெளிப்படுகிறது. நம்முடன் உரையாடலை மேற்கொள்வோர் கூறும் வார்த்தைகளை மட்டும் நாம் கேட்பது போதாது; அவ்வார்த்தைகளின் பின்புலத்தில் அவர் சொல்லமுடியாமல் தவிக்கும் உணர்வுகளை, போராட்டங்களை, நம்பிக்கையை நாம் கேட்க முயலவேண்டும். இவ்வாறு, அடுத்தவரை முழுமையாகப் புரிந்துகொள்ள விழையும் முயற்சி வழியே உண்மையான உரையாடல் உருவாகும்.
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் கூறியதுபோல, 'இறைவன் மனுவுருவான மறையுண்மையில் நமது உரையாடலின் அடித்தளம் அமைந்துள்ளது. மனித வாழ்வை முற்றிலும் பகிர்ந்துகொண்ட இறைமகன் இயேசுவிடம் விளங்கிய திறந்த மனப்பான்மை, உரையாடலுக்கு அவசியம்.
திருப்பீடத்துடன் முழுமையான உறவுகளைக் கொண்டிராத பல ஆசிய நாடுகள், திறந்த மனதுடன் உரையாடல் முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதே என் ஆழ்ந்த நம்பிக்கை.
அன்பு சகோதர ஆயர்களே, பழமைக் கலாச்சாரமும், பாரம்பரியமும் கொண்டு, பரந்து விரிந்த ஆசியக் கண்டத்தைக் காணும்போது, அங்கு வாழும் கிறிஸ்தவக் குடும்பம், ஒரு சிறு மந்தை என்பதை உணர்கிறோம். ஆயினும், இச்சிறு மந்தை, விவிலிய ஒளியை உலகின் எல்லைகளுக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. நல்லாயனாம் இறைவன், இச்சிறு மந்தையை வழிநடத்தி, உலகெங்கும் பரவியுள்ள மந்தையுடன் ஒருங்கிணைப்பாராக! திருஅவையின் தாயான அன்னைமரியாவின் பரிந்துரை உங்கள் அனைவருக்கும் கிடைப்பதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.