2014-08-17 13:20:28

திருத்தந்தை 6வது ஆசிய இளையோர் நாள் திருப்பலியில் வழங்கிய மறையுரை - உறங்கும் இளையோரைக் கண்டால் எனக்கு வருத்தமாக உள்ளது!


ஆக.17,2014. அன்பு இளைய நண்பர்களே, மறைசாட்சிகளின் மகிமை உங்கள் மீது ஒளிர்கிறது. 6வது ஆசிய இளையோர் நாளுக்கென உருவாக்கப்பட்ட விருதுவாக்கின் ஒரு பகுதியான இவ்வார்த்தைகள், நமக்கு உறுதியூட்டுகின்றன. மரணத்தைத் துணிந்து சந்தித்த கொரிய மறைசாட்சிகள், உண்மையிலேயே நம் அனைவருக்கும் உறுதியளிக்கின்றனர்!
இந்த விருதுவாக்கின் மற்றொரு பகுதியாக இருப்பது - ஆசிய இளையோரே, விழித்தெழுங்கள்! இந்த மூன்று வார்த்தைகளை இன்று நாம் சிந்திப்போம்.
முதல் வார்த்தை - 'ஆசிய' என்பது. பழமையும், செறிவும் மிகுந்த வரலாறும், கலாச்சாரமும் கொண்ட ஆசியக் கண்டத்தின் பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் இளையோரே, உங்கள் சமுதாயங்களின் வாழ்வில் முழுமையாக ஈடுபட தயங்காதீர்கள்! நம்பிக்கையின் அறிவொளியை வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் கொண்டு செல்ல அஞ்சாதீர்கள்!
ஆசியர்களாகிய நீங்கள், உங்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் விளங்கும் உன்னதமான, உண்மையான அம்சங்களை அன்புடன் ஏற்றுக் கொள்கிறீர்கள். விவிலிய விழுமியங்கள், கத்தோலிக்க நம்பிக்கை இவற்றுடன் இந்த அம்சங்களை இணைத்து வாழுங்கள். இன்றையக் கலாச்சாரம் தரும் தவறானவற்றை விட்டு அகலுங்கள்.

விருதுவாக்கின் இரண்டாவது வார்த்தை, 'இளையோரே'. நேர்மறை உணர்வுகள், சக்தி, நல்மனம் ஆகியவை, இளமைக்குரிய பண்புகள். உங்களிடம் விளங்கும் நேர்மறை உணர்வுகளை, கிறிஸ்தவ நம்பிக்கையாக, கிறிஸ்து உங்களில் மாற்றுவாராக! உங்கள் சக்தியை, நன்னெறி புண்ணியமாகவும், உங்கள் நல்மனதை, தியாகம் செய்யும் அன்பாகவும் மாற்றுவாராக!
திருஅவையின் நிகழ்காலம், நீங்களே! உங்கள் ஆயர்கள், அருள் பணியாளர்கள், உங்களுடன் பயிலும், அல்லது பணியாற்றும் இளையோர் அனைவரோடும் உறவு கொண்டு, தற்போதைய புனிதத் திருஅவையை, இன்னும் புனிதமான திருஅவையாக, இன்னும் பணிவுள்ள திருஅவையாக மாற்றுங்கள். சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோருக்கு, வறியோருக்கு, தனிமையில் வாடுவோருக்கு, நோயுற்றோருக்குப் பணியாற்றுவதன் வழியாக, இத்திருஅவை, இறைவனை அன்புசெய்து, வழிபடுகிறது.
'ஐயா, எனக்கு உதவியருளும்' என்று குரலெழுப்பிய கானானியப் பெண்ணைப் போல, எத்தனையோ பேரின் கூக்குரல்கள் இவ்வுலகில் எழுந்தவண்ணம் உள்ளன. அப்பெண்ணை அனுப்பிவிடுவதற்கு சீடர்களுக்குச் சோதனை எழுந்ததுபோல, உங்களுக்கும் சோதனைகள் எழலாம். உதவிகேட்டு குரல் எழுப்புவோரைக் கண்டு விலகிச் செல்லாமல், அவர்களை நெருங்கி உதவிகள் செய்வோம்.

மூன்றாவது வார்த்தை - 'விழித்தெழுங்கள்'. ஆண்டவர், இளையோராகிய உங்களை நோக்கி விடுக்கும் ஒரு சிறப்பு அழைப்பு இது. புனிதத்தின் அழகு, விவிலியத்தின் மகிழ்வு ஆகிய உன்னத நிலையை விட்டு விலகி, உங்கள் மனம் உறங்கிக் கொண்டிருந்தால், இப்போது விழித்தெழுங்கள்! உறங்கும் இளையோரைக் கண்டால் எனக்கு வருத்தமாக உள்ளது. உறங்குபவர்கள், பாடி, ஆடி, மகிழ முடியாது. இறைவனின் அன்பையும், கருணையையும் பெற்ற நீங்கள், மற்றவரோடு இதைப் பகிர்ந்து, ஆடி, பாடி மகிழுங்கள்! ஆசியக் கண்டத்தில் உங்களுடன் கல்வி பயில்வோர், உடன் உழைப்போர் அனைவருக்கும் இந்த மகிழ்வை எடுத்துச் செல்லுங்கள்.
இறைவனை இவ்வுலகிற்குக் கொணர்ந்த அன்னை மரியாவை அணுகிச் செல்வோம். மற்றவர்களுக்குப் பணிபுரிய, மரியன்னையின் பாசம் நம்மை வழிநடத்துவதாக!
இந்நாட்டிலும், ஆசியா முழுவதிலும் இயேசுவை மகிமைப்படுத்த மரியன்னை நமக்கு உதவுவாராக! ஆமென்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.