2014-08-17 13:57:03

ஆறாவது ஆசிய இளையோர் தின நிறைவு நிகழ்வு


ஆக.17,2014. Haemi திருத்தலத்திலிருந்து 1.7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Haemi அரண்மனை வளாகம் சென்ற திருத்தந்தையை வரவேற்க, ஏறக்குறைய 22 ஆசிய நாடுகளின் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட இளையோர் கூடியிருந்தனர். கடற்கொள்ளையரிடமிருந்து நகரைப் பாதுகாப்பதற்காக 1421ம் ஆண்டில் கட்டப்பட்ட Haemi அரண்மனை, 1490ம் ஆண்டில் இராணுவத்தின் மையமாகவும், சிறையாகவும் மாறியது. 19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த அடக்குமுறைகள், சித்ரவதைகள் மற்றும் கொலைகளுக்கு இந்த Haemi அரண்மனை வளாகம் பயன்படுத்தப்பட்டது. இங்கு ஏறக்குறைய மூவாயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்த வளாகத்தில் இஞ்ஞாயிறு மாலை 4.30 மணிக்குத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை.
இத்திருப்பலியில் திருத்தந்தை ஆங்கிலத்தில் மறையுரையாற்றினார்.
இந்தி, ஜப்பானியம், ஆங்கிலம், லாவோஸ், கொரியம் ஆகிய மொழிகளில் விசுவாசிகள் மன்றாட்டு இடம்பெற்றது. இந்த 6வது ஆசிய இளையோர் தின நிறைவுத் திருப்பலியின் இறுதியில், கொரிய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Peter Kang U-il அவர்களும், மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களும் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தனர்.
இத்திருப்பலியின் இறுதியில் இந்தோனேசிய இளையோர் குழு ஒன்று ஆசிய இளையோர் தினத் திருச்சிலுவையை திருப்பலி மேடை சென்று பெற்றுக்கொண்டது. 1991ம் ஆண்டில் போலந்து நாட்டின் செஸ்டகோவாவில் நடந்த உலக இளையோர் தினத்தில் கலந்துகொண்ட ஆசிய இளையோர் பிரதிநிதிகள் குழு, ஆசிய இளையோர் தினம் தேவை என்று கேட்டதன் பேரில் 1993ம் ஆண்டில் முதல் ஆசிய இளையோர் தினம் பாங்காக்கில் சிறப்பிக்கப்பட்டது. 2003ல் இத்தினம் பங்களூருவில் நடந்தது.
ஆசிய இளையோர் தினத்தை நிறைவு செய்து மீண்டும் ஹெலிகாப்டரில் செயோல் சென்று திருப்பீட தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இத்திருப்பயணத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. அன்பு நேயர்களே, இத்திருப்பயணத்தில் திருத்தந்தை நமக்கு, குறிப்பாக இளையோருக்குக் கூறியவைகளை நம் வாழ்வில் செயல்படுத்த முயற்சிப்போம். தென் கொரியத் திருப்பயணத்தை இத்திங்களன்று நிறைவு செய்து திங்கள் மாலை 6 மணிபோல் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.