2014-08-16 13:55:57

தென் கொரியத் திருப்பயணத்தின் மூன்றாவது நாள் : மாலை நிகழ்வுகள்


ஆக.16,2014. தென் கொரியத் திருப்பயணத்தின் மூன்றாவது நாளாகிய இச்சனிக்கிழமை மாலை 3.15 மணிக்கு, மாலை பயண நிகழ்ச்சிகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். செயோல் நகரிலிருந்து ஹெலிகாப்டரில் Kkottongnae சென்றார் திருத்தந்தை. மலர்களின் குன்று எனப்படும் Kkottongnae, அருங்கொடை இயக்கக் குழுவின் அருள்பணி John Oh Woong Jin அவர்களால் 70களில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு 150 மாற்றுத்திறனாளிகளுக்கென இயங்கும் நம்பிக்கையின் இல்லம் சென்று சிறாரை ஆசீர்வதித்தார். பின்னர் அங்கிருந்து அன்பின் பள்ளிக்குத் திறந்த காரில் சென்றபோது கருக்கலைப்புக் குழந்தைகள் தோட்டத்தில் இறங்கி சிறிதுநேரம் செபித்தார். மனித வாழ்வுக்கு ஆதரவு வழங்கும் குழுவால் இத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், அன்பின் பள்ளியில் கொரியத் துறவியரைச் சந்தித்தார் திருத்தந்தை. இருபால் துறவியருடன் சேர்ந்து திருப்புகழ்மாலை செபித்து மறையுரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் Kkottongnae ஆன்மீக மையத்தில் 150 பொதுநிலை அப்போஸ்தலத்துவத் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை.
இச்சந்திப்பை முடித்து Kkottongnaeவிலிருந்து 87 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற செயோல் சென்று திருப்பீடத் தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை. இத்துடன் இச்சனிக்கிழமை தின நிகழ்வுகள் நிறைவடைந்தன. இஞ்ஞாயிறன்று ஆறாவது ஆசிய இளையோர் தின நிறைவு நிகழ்வு இடம்பெறும்.
தென் கொரியத் திருப்பயணத்தின் இரண்டாவது நாளாகிய இவ்வெள்ளி இரவு செயோல் நகரிலுள்ள Sogang இயேசு சபை பல்கலைக்கழகத்துக்குத் திடீரென்று சென்று அங்கிருந்த ஏறக்குறைய 40 இயேசு சபை அருள்பணியாளர்களை ஆனந்தவியப்பில் ஆழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த இயேசு சபை இல்லப் பயணியர் ஏட்டில், நன்றி, சகோதரத்துவம், செபத்தில் ஒன்றிப்பு ஆகிய தனது மூன்று உணர்வுகளை வெளிப்படுத்தி எழுதினார். இயேசு சபை அருள்பணியாளர்கள், மேய்ப்புப்பணியாளர்களாக, மக்களின் ஆறுதலாக வாழுமாறு கேட்டுக்கொண்டார். ஆற்றின் மேற்கே என்று அர்த்தம் கொண்ட Sogang பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய 12 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். தற்போதைய கொரிய அரசுத்தலைவர் Park Geun-hye Sogang பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவராவார். தற்போது தென் கொரியாவில் 40 பல்கலைக்கழகங்கள் மற்றும் 293 பள்ளிகளை கிறிஸ்தவர்கள் நடத்தி வருகின்றனர்.
மறைசாட்சிகளின் வெற்றி, இறையன்பின் சக்திக்கு அவர்கள் பகன்ற சான்று வாழ்வு நமக்கும் சவால் விடுக்கின்றன. விசுவாசத்துக்காக உயிரைக் கொடுக்க நாம் தயாரா? என்று மறைசாட்சிகள் நம்மைக் கேட்கிறார்கள். நமது பதில் என்ன?

ஆதராம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.