2014-08-16 13:56:13

தென் கொரியத் திருப்பயணத்தின் மூன்றாம் நாள் : காலை நிகழ்வுகள்


ஆக.16,2014. மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவத்தின் வித்து என்பதற்குச் சாட்சியாகத் திகழ்வது தென் கொரியத் தீபகற்பம். இந்தியா, இலங்கை போன்று, இந்நாட்டில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை முதன்முதலில் மறைப்பணியாளர்களோ அல்லது அருள்பணியாளர்களோ பரப்பவில்லை. மாறாக, தென் கொரியாவின் உயர்குடி மக்கள் இறையியல் நூல்களை வாசித்து கத்தோலிக்கம் பற்றி அறிந்து அதை மற்ற மக்களுடன் பகிர்ந்துகொண்டதன் பயனாக கிறிஸ்தவம் பரவியது. Joseon பரம்பரை மன்னர்கள் தென் கொரியாவை ஆட்சி செய்த காலத்தில் 1603ம் ஆண்டில் உரோமன் கத்தோலிக்கம் முதலில் பரவத் தொடங்கியது என்று சொல்லலாம். Yi Gwang–jeong என்ற கொரியத் தூதர் சீனாவின் பெய்ஜிங் சென்று திரும்பியபோது இயேசு சபையின் இத்தாலிய மறைப்பணியாளர் அருள்திரு மத்தேயோ ரிச்சி அவர்கள் எழுதிய இறையியல் நூல்களைக் கொண்டு வந்தார். அந்த நூல்களில் இருந்த செய்திகளை இவர் பரப்பத் தொடங்கியதன் மூலம் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. கத்தோலிக்கம் ஒரு தீய நடவடிக்கை என்றும், இது கன்பூஷியனிச மதத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்றும் சொல்லி, 1758ம் ஆண்டில் Joseon பரம்பரையைச் சேர்ந்த அரசர் Yeongjo, கத்தோலிக்கத்தைத் தடை செய்தார். பின்னர் 1785ம் ஆண்டில் உரோமன் கத்தோலிக்கம் மீண்டும் அந்நாட்டில் அனுமதிக்கப்பட்டது. ஆயினும் 1791க்கும் 1888ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொரியக் கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் ஏறக்குறைய பத்தாயிரம் என திருஅவை சொல்கிறது. இவ்வாறு கொல்லப்பட்ட மறைசாட்சிகளில் 79 பேர் 1925ம் ஆண்டிலும், 24 பேர் 1968ம் ஆண்டிலும், 103 பேர் 1984ம் ஆண்டிலும் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் 124 மறைசாட்சிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இவ்வாண்டு ஆகஸ்ட் 16, இச்சனிக்கிழமை காலையில் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.
தென் கொரியத் திருப்பயணத்தின் மூன்றாவது நாளாகிய இச்சனிக்கிழமையன்று, “செல்வம், செல்வாக்கு, மதிப்பு ஆகியவை குறைவான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன, கிறிஸ்து ஒருவரே உண்மையான செல்வம் என மறைசாட்சிகள் நமக்குப் போதிக்கின்றனர்” என்ற டுவிட்டர் செய்தியைப் பதிவுசெய்து தனது பயண நிகழ்ச்சிகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். கொரியாவில் திருப்பயணம் மேற்கொண்டிருந்தாலும், பிற இடங்களில் துன்புறும் மக்களையும் தான் மறக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக, ஈராக்கில் கிறிஸ்தவர்களின் அழுகையையும், அங்கு துன்புறும் மக்களையும் நாம் மறக்காதிருப்போம் என்ற மற்றொரு டுவிட்டர் செய்தியையும் இச்சனிக்கிழமையன்று பதிவுசெய்துள்ளார் திருத்தந்தை. இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இச்சனிக்கிழமை காலை 5.15 மணிக்கு செயோல் திருப்பீடத் தூதரகத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Seo So-Mun மறைசாட்சிகள் திருத்தலத்துக்குக் காரில் சென்றார் திருத்தந்தை. ஒரு காலத்தில் இவ்விடத்தில் கத்தோலிக்கர் உட்பட பலருக்குப் பொதுவில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. தற்போது இங்கு 103 கொரிய கத்தோலிக்க மறைசாட்சிகள் திருத்தலம் எழுப்பப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு மே 6ம் தேதியன்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இந்த 103 மறைசாட்சிகளை புனிதர்கள் என அறிவித்தார். Gwanghwamun நுழைவாயிலிலிருந்து Seo So-Mun செல்லும் சாலை, மரணச்சாலை அல்லது மறைசாட்சிகளின் சாலை என அழைக்கப்படுகிறது. தென் கொரியாவில் கடந்த ஏப்ரல் 16ம் தேதியன்று நடந்த Sewol கப்பல் விபத்தில் பலியானவர்களில் ஒருவரின் தந்தைக்கு இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை திருமுழுக்கு வழங்குவதாக இருந்தது. ஆயினும், இந்நிகழ்வு இஞ்ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Seo So-Mun மறைசாட்சிகள் திருத்தலத்தில் சிறிதுநேரம் மௌனமாகச் செபித்த பின்னர் மலர் வளையம் ஒன்றையும் வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் காரில் ஏறி Gwanghwamun வளாகம் சென்றார் திருத்தந்தை. சீனாவின் தியானமென் வளாகத்துக்கு அடுத்ததாக, Gwanghwamun வளாகம் ஆசியாவின் மிகப்பெரிய வளாகம் ஆகும். செயோல் நினைவுச்சின்னமாக அமைந்துள்ள Gwanghwamun நுழைவாயில், இந்நாட்டின் பழைய மற்றும் தற்போதைய வரலாற்றின் மையமாக அமைந்துள்ளது. Joseon பரம்பரையின் முதல் அரசரால் 1395ம் ஆண்டில் அமைக்கப்பட்ட Gwanghwamun நினைவுச்சின்னம், ஜப்பானிய ஆக்ரமிப்பில் அழிக்கப்பட்டது. தற்போதைய நுழைவாயில் 1968ல் புதுப்பிக்கப்பட்டதாகும். “உலகை ஒளிர்விக்கட்டும்” என்ற பொருள் கொண்ட Gwanghwamun வளாக்த்தில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். பிற கிறிஸ்தவ சபையினரும், பிற மதத்தவரும் கூடியிருந்தனர். இவ்விடத்துக்குத் திறந்த காரில் திருத்தந்தை சென்றுகொண்டிருந்தபோது, வழியில், காவல்துறையின் கெடுபிடிகளை நெருக்கிக்கொண்டு, Sewol கப்பல் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் நிற்கக் கண்டார். உடனே காரைவிட்டு இறங்கி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். அவர்களில் ஒருவர் கொடுத்த குறிப்பையும் புன்சிரிப்போடு பெற்றுக்கொண்டார். இதில் பலியானவர்களை நினைவுகூரும் மற்றும் இவர்களுக்கு அரசிடமிருந்து உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தும் விதமாக திருத்தந்தை தனது மேலுடையில் ஒரு சிறிய மஞ்சள் நிற ரிபனைக் குத்தியிருந்தார். பின்னர் காரில் ஏறி அவ்வளாகத்தில் இருபுறமும் இருந்தவர்களை வாழ்த்தி சிறாருக்கு முத்தம் கொடுத்து திருப்பலி மேடைக்கு வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கொரியக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக, மக்கள் சிரம் தாழ்த்தி கைகளைக் குவித்து தங்கள் மரியாதையையும், மதிப்பையும் திருத்தந்தைக்கு வெளிப்படுத்தினர். ஆசியக் கர்தினால்கள், ஆயர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களுடன் இணைந்து 124 கொரிய மறைசாட்சிகளை அருளாளர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலியை ஆரம்பித்தார் திருத்தந்தை. திருப்பலியில் வெகு அமைதியாகவும் மிகுந்த பக்தியுடனும் மக்கள் கலந்துகொண்டனர். முப்பதாயிரம் காவல்துறையினர் பணியில் இருந்தனர்.
மறைசாட்சிகளான Paul Yun Ji-chung மற்றும் அவரோடு சேர்ந்த 123 தோழர்களையும் அருளாளர்கள் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த 123 மறைசாட்சிகளில் James Ju Mun-mo ஒருவர் மட்டுமே அருள்பணியாளர். சீனரான இவர் கொரியாவில் மறைப்பணியைத் தொடங்கிய ஆறு ஆண்டுகளில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை பத்தாயிரமானது. இவரது தலை துண்டிக்கப்பட்ட பின்னர் அது பொதுவில் காட்சிப்பொருளாகத் தொங்கவிடப்பட்டது.
இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரையும் ஆற்றினார்.
இத்திருப்பலியில் இடம்பெற்ற விசுவாசிகள் மன்றாட்டில் ஒரு பொதுநிலை விசுவாசி, ஆசிய மக்கள் மத்தியில் அமைதியும் ஒப்புரவும் ஏற்பட செபித்தார். ஒரு சீனக் குரு, நசுக்கப்பட்ட தங்களின் திருஅவைக்காகவும், ஒரு கொரிய அருள்சகோதரி மறைசாட்சிகள் விதைத்த வித்து இன்று கொரியாவில் வீணாகிவிடக் கூடாது எனவும் செபித்தனர். மற்றொரு கொரிய இளம்பெண், இரு கொரிய நாடுகளின் பிரிவினைகள் நீங்கி, சமூகத்திலும், அரசியலிலும் உறுதியான தன்மையும், சகோதரத்துவம் நிலைபெறவும் செபித்தார். இத்திருப்பலியின் தொடக்கத்தில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய செயோல் பேராயர் கர்தினால் Andrea Yeum Soo-jung அவர்கள், அருளாளர் நிலைக்கு உயர்த்தும் இன்றைய திருப்பலி, உலகளாவிய சகோதரத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதன்மூலம், கொரியக் கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல், அனைத்து ஆசிய மக்களுக்கும் நல்லிணக்கத்தையும் ஒன்றிப்பையும் கொண்டுவரும் என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தார். இத்திருப்பலியை நிறைவுசெய்து செயோல் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.