2014-08-16 13:18:56

திருத்தந்தை : அன்றும், இன்றும் எண்ணற்ற மறைச் சாட்சிகள் கிறிஸ்துவுக்காக துன்பங்களைத் தாங்கியவண்ணம் உள்ளனர்


ஆக.16,2014. சகோதர, சகோதரிகளே,
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? (உரோ. 8: 35) என்ற வார்த்தைகள் வழியே கிறிஸ்துவின் மகிமையைப் பற்றி பவுல் அடியார் கூறுகிறார். கிறிஸ்து அடைந்த வெற்றி, நமது வெற்றியும் கூட!
இன்று நாம் Paul Yun Ji-chung மற்றும் 123 துணையாளர்களின் வெற்றியைக் கொண்டாடுகிறோம். இவர்கள், புனிதர்களான Andrew Kim Taegon, Paul Chong Hasang இன்னும் ஏனையப் புனிதர்களோடு இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, அவருக்காக உயிர் துறந்தவர்கள். இன்று அவரோடு இன்பத்தில், மகிமையில் அரசாள்கின்றனர். கிறிஸ்துவின் மரணத்தாலும், உயிர்ப்பாலும் இந்த வெற்றி நம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மறைசாட்சிகள் அடைந்த வெற்றி, இன்றும் கொரியத் திருஅவையில் பலன்கள் தந்தவண்ணம் உள்ளது. முத்திப்பேறு பெற்ற Paul அவர்களையும், துணையாளர்களையும் கொண்டாடும்போது, கொரியத் திருஅவை பிறந்து வளர்ந்த நாட்களுக்குச் செல்ல நமக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
கொரிய நாட்டிற்கு, மறைபரப்புப் பணியாளர்கள் வழியாக அல்ல, மாறாக, இம்மண்ணைச் சார்ந்தவர்கள் வழியே கிறிஸ்தவ நம்பிக்கை இங்கு கொணரப்பட்டது. சமயம் சார்ந்த உண்மையை அறியும் ஆவலே கிறிஸ்தவ மறையை இந்நாட்டிற்கு அறிமுகம் செய்தது. விவிலியத்தை அறியும் ஆவல், கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் வாய்ப்பை உருவாக்கியது. இந்த விவிலிய அறிவு, முதல் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையையும் இம்மண்ணில் அறிமுகப்படுத்தியது. சமுதாயப் பாகுபாடுகளை மறுத்து வாழ்ந்த முதல் கிறிஸ்தவர்களைப் போல, இந்நாட்டிலும் நிலவிவந்த சமுதாய வேறுபாடுகளை மறுத்து, ஒரே குடும்பமாக வாழும் முயற்சி ஆரம்பமானது.
இத்தகைய உயர்ந்த வரலாறு, பொது நிலையினரின் அழைப்பு, முக்கியத்துவம், மாண்பு ஆகியவற்றை நமக்கு உணர்த்துகின்றது. கிறிஸ்தவ மதிப்பீடுகளுடன் வாழும் குடும்பங்களை நான் வாழ்த்துகிறேன். அதேபோல், அயராத உழைப்புடன், இக்குடும்பங்களை வழிநடத்திவரும் அருள் பணியாளர்களையும் வாழ்த்துகிறேன்.
நம்மை உண்மையில் அர்ச்சித்து, உலகிலிருந்து நம்மைக் காக்கும்படி இயேசு எழுப்பிய மன்றாட்டை இன்றைய நற்செய்தி வழியாக செவிமடுத்தோம். நம்மை அர்ச்சித்து காக்கும்படி இயேசு மன்றாடுகிறார். நம்மை இவ்வுலகிலிருந்து அப்புறப்படுத்தும்படி அவர் மன்றாடவில்லை. உலகில் தங்கி, அதன் உப்பாக, ஒளியாக, புளிக்காரமாகச் செயலாற்ற இயேசு தன் சீடர்களை அனுப்பினார். சீடர்களுக்கு வழங்கப்பட்ட இப்பணியை மறைசாட்சிகளும் செய்து, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
நம்பிக்கையின் விதைகள் இந்நாட்டில் விதைக்கப்பட்டதும், இயேசுவைத் தேர்ந்தெடுப்பதா? உலகைத் தேர்ந்தெடுப்பதா? என்ற போராட்டம் எழுந்தது. உலகம் உங்களை வெறுக்கும் (யோவா. 17:14) என்று இயேசு விடுத்த எச்சரிக்கையை இந்நாட்டின் முதல் கிறிஸ்தவர்கள் உணர்ந்திருந்தனர். பல்வேறு துன்பங்கள் தங்களைச் சூழ்ந்தாலும், தொடர்ந்து அவர்கள் இயேசுவைப் பின்பற்றுவதில் மனம் தளரவில்லை.
இயேசுவா, உலகமா எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சவால் இன்றும் நம்முன் வைக்கப்பட்டுள்ளது. அன்றும், இன்றும் எண்ணற்ற மறைச் சாட்சிகள் கிறிஸ்துவுக்காக துன்பங்களைத் தாங்கியவண்ணம் உள்ளனர்.
கொரிய நாட்டில் உயிர் துறந்த மறைசாட்சிகளின் செபங்கள் நமக்கு உதவுவதாக! திருஅவையின் தாயான மரியன்னை, நம்பிக்கையில் நம்மைக் காத்து, வளர்ப்பாராக! கிறிஸ்துவின் சாட்சிகளாக நாம் ஆசியக் கண்டத்திலும், உலகெங்கும் வாழ இறைவன் வரம் அருள்வாராக!

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.