2014-08-16 15:18:47

திருத்தந்தை - நம்பிக்கை, பிறரன்பு என்ற பாரம்பரியத்தை கொரியாவில் வளர்த்த பெருமை, பொது நிலையினரையேச் சாரும்


ஆக.16,2014. அன்பு சகோதர, சகோதரிகளே,
கொரியத் திருஅவையில் சிறப்பான பணியாற்றும் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். சிறப்பான நன்றி கூறுகிறேன். இந்நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை வேரூன்றுவதற்கு ஆரம்பப் பணிகள் ஆற்றியது, பொது நிலையினரே. பல்வேறு கலவரங்களில், அருள் பணியாளர்களின் பணிகள் தடை செய்யப்பட்டபோதும், திருஅவையில் தொடர்ந்து பணியாற்றியது, பொது நிலையினரே. நம்பிக்கை, பிறரன்பு என்ற பாரம்பரியத்தை இந்நாட்டில் வளர்த்த பெருமை உங்களையேச் சாரும்.
உங்கள் பல்வேறு பணிகளில், வறியோருக்கும், தேவையில் இருப்போருக்கும் நீங்கள் ஆற்றிவரும் பணிகளை நான் இன்று சிறப்பாக பாராட்ட விரும்புகிறேன்.
சமுதாயத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வு என்ற பிரிவுக்கு எதிராக, உங்கள் முன்னோர், கிறிஸ்தவ வாழ்வின் சமத்துவத்தை இந்நாட்டில் நிலை நிறுத்தியதை எண்ணிப் பார்க்கிறேன். சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்ந்தோரைத் தேடிச் சென்ற உங்கள் முன்னோரைப் பாராட்டுகிறேன்.
கொரியக் கத்தோலிக்கப் பெண்கள் ஆற்றியப் பணியைச் சிறப்பாகப் பாராட்டுகிறேன். குடும்பத் தலைவிகளாக, மறைக்கல்வி புகட்டுபவர்களாக, பள்ளி ஆசிரியர்களாக, திருஅவைக்கும், கொரிய நாட்டிற்கும் பெண்கள் ஆற்றியுள்ள பணிகள் உன்னதமானவை.
குடும்ப வாழ்வு குலைந்துவரும் ஆபத்தான இந்நாட்களில், மணமான தம்பதியரையும், குடும்ப உறவுகளையும் காப்பது, திருஅவைக்குத் தரப்பட்டுள்ள சவால்.
எத்தகையப் பணிகளை நீங்கள் செய்தாலும், பொது நிலையினரைத் தகுந்த வழிகளில் வளர்ப்பது உங்கள் முக்கியமான பொறுப்பு. உங்கள் பங்கு அருள் பணியாளர்களுடன் முழுமையாக ஒத்துழைத்து, உங்கள் பணிகளைத் திருஅவைக்காகத் தொடர்ந்து ஆற்றுங்கள்! கொரியத் திருஅவைக்கும் ஆசியத் திருஅவைக்கும் உங்கள் தொடர்ந்த பணிகள் மிகவும் அவசியம்.
புனிதத்தோடும், ஆர்வத்தோடும் நீங்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். உங்கள் பணிகள் அனைத்திற்கும் தேவையான வரங்களை திருப்பலியின் வழியாக பெறுவீர்களாக! திருஅவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள உங்களையும், உங்கள் குடும்பங்களையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.