2014-08-16 15:18:31

கொரியத் துறவிகளிடம் திருத்தந்தை : கடவுளால் அன்பு செய்யப்படுதல் என்ற உள்ளுணர்வே இறை அழைத்தலின் உயிர்நாடி


ஆக.16,2014. கிறிஸ்துவில் என் சகோதர, சகோதரிகளே,
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அருள் கொடைகளாலும், பணிகளாலும், கொரியத் திருஅவையிலும், இன்னும் பிற நாடுகளிலும் நீங்கள் புத்துணர்வு தருவது கண்டு மகிழ்கிறேன்.
கடவுளால் அன்பு செய்யப்படுகிறீர்கள் என்ற உள்ளுணர்வே உங்கள் அழைத்தலின் உயிர்நாடி. கடவுளையும், அவரது அரசையும் இவ்வுலகில் நிலைநாட்டவும், விண்ணகத்தின் மகிழ்விற்கு முன்சுவையாக இருக்கவும் இந்த உள்ளுணர்வு உதவுகிறது. நமது சாட்சிய வாழ்வு மகிழ்வு நிறைந்ததாக இருந்தால் மட்டுமே ஏனைய மனிதர்களை நாம் கிறிஸ்துவிடம் ஈர்க்க முடியும். நமது செபவாழ்வு, இறைவார்த்தை, தினசரி திருப்பலி இவையே இந்த மகிழ்வை நமக்கு வழங்கமுடியும். இவை நம் வாழ்வில் இல்லாதபோது, ஏனையப் பிரச்சனைகளும், துன்பங்களும் நம்மை ஆக்கிரமிக்கின்றன.
கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகிய துறவற வாக்குறுதிகள் வழியே இறைவனுக்கு மட்டுமே நாம் உரியவர்கள் என்பதை உலகறியச் செய்கிறோம். அவரது கருணையே நம் வாழ்வின் ஆதாரம் என்பதைப் பறைசாற்றுகிறோம்.
கீழ்ப்படிதல் வழியே நாம் இறைவனின் உண்மையான ஊழியர்களாகிறோம். கற்பின் வழியே கடவுளுக்கு முழுவதும் அர்ப்பணமாகிறோம். ஏழ்மையின் வழியே கடவுளே நமது உடைமை என்பதை உணர்கிறோம்.
துறவற வாழ்வில், ஏழ்மை என்பது, காக்கும் சுவராகவும், தாயாகவும் விளங்குகிறது. அர்ப்பண வாழ்வைப் பாதுகாக்கும் சுவராகவும், நேரிய வாழ்வில் வளர உதவும் தாயாகவும் ஏழ்மை விளங்குகிறது.
ஏழ்மை என்ற வாக்குறுதியை வாய்மொழியாகக் கூறியபின், உலகப் போக்கில் செல்வம் மிகுந்த வாழ்வு நடத்தும் துறவியர், வெளிவேடமிட்டு வாழ்பவர். இத்தகைய வாழ்வு, கிறிஸ்துவையும், திருஅவையையும் காயப்படுத்துகிறது.
அன்பு சகோதர, சகோதரிகளே, பணிவு நிறைந்த மனதோடு, துறவற வாழ்வு எவ்வளவு உயர்ந்ததொரு செல்வம் என்பதை உலகறியச் செய்யுங்கள். நீங்கள் பெற்றுக்கொண்ட இச்செல்வத்தை உலகினரோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
உங்கள் அனைவரையும், குறிப்பாக, உங்கள் துறவு இல்லங்களில் வாழும் வயது முதிர்ந்தோர், மற்றும் நோயுற்றோரை அன்னை மரியாவின் அன்புப் பராமரிப்பில் ஒப்படைக்கிறேன். நிலையான அருளையும், அமைதியையும் இயேசு உங்களுக்கு வழங்க ஆசீர் அளிக்கிறேன்!

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.