2014-08-15 14:27:06

திருத்தந்தை பிரான்சிஸ் ஆசிய இளையோரிடம் : கிறிஸ்துவின்மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள்


ஆக.15,2014. நாம் இங்கேயே இருப்பது நல்லது (மத்.17:4) என்று, இயேசு தபோர் மலையில் தோற்றமாற்றம் அடைந்தபோது புனித பேதுரு சொன்னார். உண்மையில், இந்த கொரிய மறைசாட்சிகள் திருத்தலத்தில் நாம் இருப்பது நல்லது. இந்த மறைசாட்சிகளில், இந்த நாட்டுத் திருஅவை வாழ்வின் விடியல் ஆண்டவரின் மகிமை வெளிப்படுத்தப்பட்டது. ஆசியாவின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து இங்கு ஒன்று கூடியுள்ள கிறிஸ்தவ இளையோர் மத்தியில் இயேசுவின் மகிமையை உணர முடிகின்றது. உங்கள் அனைவரின் இனிய வரவேற்புக்கு நன்றி. “மறைசாட்சிகளின் மகிமை உங்களில் ஒளிர்வதாக” என்ற ஆசிய இளையோர் தின மையப் பொருளின் ஒரு பகுதியை உங்களோடு சேர்ந்து இப்பொழுது சிந்திக்க விழைகிறேன். ஆண்டவர் தமது மகிமையை இந்த மறைசாட்சிகளின் வீரத்துவமான சாட்சிய வாழ்வில் ஒளிரச் செய்ததுபோல, ஆண்டவர் உங்கள் வாழ்விலும் தமது மகிமையை ஒளிரச் செய்ய விரும்புகிறார். இந்த சாட்சிய வாழ்வை, உங்கள் வழியாக இந்த ஆசியக் கண்டம் முழுவதிலும் விளக்கேற்ற விரும்புகிறார். இன்று கிறிஸ்து உங்கள் இதயங்களைத் தட்டுகிறார். உங்களை அவர் எழுந்திருக்கவும், விழிப்பாய் இருக்கவும் அழைக்கிறார், வாழ்வில் உங்களைச் சார்ந்துள்ள விடயங்களைப் பார்க்கவும் அழைக்கிறார். இந்த உலகின் நெடுஞ்சாலைகளுக்கும் சாலைகளுக்கும் நீங்கள் சென்று மற்ற மக்களின் இதயக் கதவுகளைத் தட்டி, அவர்கள் தங்கள் வாழ்வில் இயேசுவை வரவேற்கத் தூண்டுமாறு உங்களை அழைக்கிறார்.
இறைத்திட்டத்தில் திருஅவை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை நோக்குவதற்கு, ஆசிய இளையோரின் இந்த மாபெரும் கூட்டம் நமக்கு உதவுகிறது. எல்லா இடங்களிலும் இருக்கின்ற இளையோர் போலவே நீங்களும், தடைகளை மேற்கொண்டு, பிரிவினைகளைக் குணப்படுத்தி, வன்முறையையும் முற்சார்பு எண்ணங்களையும் புறக்கணித்து அமைதியிலும் நட்பிலும் அனைவரும் ஒன்றிணைந்து வாழும் ஓர் உலகை அமைப்பதற்கு விரும்புகின்றீர்கள். உண்மையில் இறைவன் விரும்புவதும் இதுவே. திருஅவை, முழு மனிதக் குடும்பத்துக்கும் ஒன்றிப்பின் விதையாக இருக்கவே உள்ளது. கிறிஸ்துவில் அனைத்து நாடுகளும் மக்களும் ஒன்றிணைந்து வாழவே அழைக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகின் போக்கு இதற்கு எவ்வளவு தூரம் வெகு தொலைவில் உள்ளது. நாம் விதைக்க முயற்சிக்கும் நன்மைத்தனம் மற்றும் நம்பிக்கை விதைகள், தன்னலம், காழ்ப்புணர்வு, அநீதி ஆகிய முள்களால் அமுக்கப்படுகின்றன. நம்மைச் சுற்றி மட்டுமல்லாமல், நம் இதயங்களுக்குள்ளும் இவ்வாறு நடக்கின்றன. நம் சமூகங்களில் வளர்ந்துவரும் ஏழை-பணக்காரர் இடைவெளியினால் நாம் குழப்பமடைந்துள்ளோம். மனிதவாழ்வை விலைவைத்து அனுபவிக்கப்படும் செல்வம், அதிகாரம், இன்பம் ஆகிய சிலைவழிபாட்டின் அடையாளங்களைப் பார்க்கிறோம். நம் வீடுகளின் அருகிலேயே வாழும் மிகுந்த செல்வம் படைத்த நம் நண்பர்களும் மற்றவர்களும் ஆன்மீக வறுமையிலும், தனிமையிலும், மனச்சோர்விலும் துன்புறுவதைக் காண்கிறோம். இவர்கள் வாழ்விலிருந்து இறைவன் நீக்கப்பட்டுவிட்டதுபோல் தெரிகின்றது. இந்த ஆன்மீகப் பாலைநிலம் உலகெங்கும் பரவத் தொடங்கியிருப்பதுபோல் தெரிகின்றது. இது இளையோரைப் பாதித்து அவர்களின் நம்பிக்கையைத் திருடுகின்றது. பலரில் அவர்களின் வாழ்வையே பாதித்துள்ளது.
ஆயினும், இளையோரே, நீங்கள் எல்லா இடங்களுக்கும் சென்று, நம்பிக்கையின் நற்செய்திக்கு, இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கு அவரின் இறையரசின் வாக்குறுதிக்கு சாட்சி சொல்வதற்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள். இயேசுவின் ஆவி ஒவ்வொரு மனித இதயத்திலும் புதிய வாழ்வைக் கொணர்ந்து ஒவ்வொரு சூழலையும், ஏன், நம்பிக்கையிழந்து காணப்படும் சூழலையும் மாற்றுவார் என்று நற்செய்தி போதிக்கின்றது. இந்தச் செய்தியையே நீங்கள் உங்களைப் போன்றவர்களிடம், பள்ளிகளிலும், பணியிடங்களிலும், உங்கள் குடும்பங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், உங்கள் குழுக்களிலும் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
அன்பு இளம் நண்பர்களே, உங்கள் தலைமுறையில் நம் ஆண்டவர் நம்பிக்கை வைத்துள்ளார். இவ்வுலகில் நீங்கள் அவருக்குச் சாட்சி சொல்வதற்காக, அவர் திருவருள்சாதனங்கள் மூலமாக உங்கள் இதயங்களில் நுழைந்துள்ளார். இதற்கு “ஆகட்டும்” என்று சொல்ல நீங்கள் தயாரா? நீங்கள் தயாரா?
நற்செய்திக்கு நீங்கள் மகிழ்வான மற்றும் உண்மையான சாட்சிகளாக இருப்பதற்கு மூன்று பரிந்துரைகளை உங்கள்முன் வைக்கிறேன். முதலில் உங்கள் சக்தியை கிறிஸ்துவின்மீது வையுங்கள். அவரின் வார்த்தையிலும் அவரின் அருளின் வல்லமையிலும் ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள். இரண்டாவதாக, தினசரி செபத்தில் இயேசுவுக்கு நெருக்கமாக இருங்கள். ஆண்டவரை வழிபட மறவாதீர்கள். மேலும், நற்செய்திக்கு முரணான பல ஒளிகளால் நீங்கள் சூழ்ந்துள்ளீர்கள் அதனால் உங்களின் ஒவ்வோர் எண்ணமும், சொல்லும் செயலும், கிறிஸ்துவின் வார்த்தையின் ஞானத்தாலும், அவரின் உண்மையின் வல்லமையாலும் வழிநடத்தப்பட வேண்டுமென கேட்கிறேன். அவர் உங்களுக்கென வைத்துள்ள திட்டத்தை நாள்தோறும் கற்பிக்கிறார். குருத்துவ மற்றும் துறவு வாழ்வுக்கு அவர் உங்களை அழைத்தால் அதற்கு ஆம் என்று சொல்ல அஞ்ச வேண்டாம். அதற்கு வேண்டிய அருளை அவர் தருகிறார். உண்மையான மகிழ்வு மற்றும் நிறைவான வழியை அவர் காட்டுவார். ஆசியா மற்றும் உலகெங்கும் சென்று அவரின் அன்பின் சாட்சிகளாக நீங்கள் வாழ சக்தியைக் கொடுக்கிறார்.
ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.