2014-08-15 09:50:05

திருத்தந்தை பிரான்சிஸ் : கொரியக் கத்தோலிக்கர் தங்களது வளமான மரபுகளை வருங்காலத் தலைமுறைகளுக்கு வழங்குவார்களாக


ஆக.15,2014. நம் அன்னை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமையில் நுழைந்த விழாவை அகிலத் திருஅவையுடன் இணைந்து நாம் சிறப்பிக்கிறோம். அன்னைமரியாவைப்போல, நாமும், பாவம் மற்றும் மரணத்தின்மீது நம் ஆண்டவர் அடைந்த வெற்றியில் முழுவதும் பங்குகொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். உண்மையான விடுதலை வானகத்தந்தையின் விருப்பத்தை அன்புடன் ஏற்பதில் காணப்படுகின்றது. இந்த விடுதலை இவ்வுலக நிதர்சனங்களை புதிய, ஆன்மீக வழியில் பார்ப்பதற்கான விடுதலையாகும். வானக அரசியான மரியாவை இன்று வணங்கும் நாம், அவ்வன்னையை கொரியாவில் திருஅவையின் தாயாகவும் பார்க்கிறோம். இவ்வேளையில் கொரியத் திருஅவை கொரியாவில் இறையரசின் புளிக்காரமாகத் திகழவும், இறைவனின் திட்டத்திற்கு ஏற்ப நாம் உலகை மாற்றவும் நம்மை வழிநடத்த அன்னையின் உதவியை நாடுவோம். இந்த நாட்டின் கிறிஸ்தவர்கள், சமுதாயத்தின் ஒவ்வொரு நிலைக்கும் ஆன்மீகப் புதுப்பித்தலின் தாராளமான சக்தியாக மாறுவார்களாக. தன்னலத்தையும், சண்டைகளையும் உருவாக்கும் கட்டுபாடற்ற போட்டி உணர்வுகளுக்கும், உண்மையான ஆன்மீக மற்றும் கலாச்சார விழுமியங்களைத் திணறடிக்கும் உலகாயுதப் போக்கிற்கும் எதிராய்ப் போராடுவார்களாக. வறுமையின் புதிய வடிவங்களை உருவாக்கி தொழிலாளர்களை ஓரங்கட்டும் மனிதமற்ற பொருளாதாரப் படிவங்களைப் புறக்கணிப்பார்களாக. வாழ்வின் கடவுளின் உருவத்தைக் குறைத்து மதிப்பிடும் ஒவ்வொரு மனிதரின் மாண்பை மீறுகின்ற மரணக் கலாச்சாரத்தையும் புறக்கணிப்பார்களாக.
சிறந்த மரபின் வழிவந்தவர்களாகிய கொரியக் கத்தோலிக்கர் தங்களது இந்த வளமான மரபுகளை வருங்காலத் தலைமுறைகளுக்கு வழங்குவார்களாக. இது, இறைவார்த்தைக்கு, புதுப்பிக்கப்பட்ட மனமாற்றம் அடையவும், நம் மத்தியிலுள்ள ஏழைகள், தேவையில் இருப்போர் ஆகியோர்மீது மிகுந்த கரிசனை காட்டவும் நம்மை வலியுறுத்துகிறது. தூய கன்னிமரியாவின் விண்ணேற்பு விழாவைக் கொண்டாடும்போது, மரியாவை நம் நம்பிக்கையின் தாயாக நோக்கும் அகிலத் திருஅவையோடு நாமும் இணைகின்றோம். இன்றைய சமூகங்களில் புற்றுநோய் போன்று வளர்வதாகத் தெரியும் நம்பிக்கையின்மைக்கு மாற்று மருந்தாக இந்த நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையின்மை, அகத்தில் அடிக்கடி துயரத்தையும் வெறுமையையும் அனுபவிக்க வைக்கின்றது. இறைவனின் குழந்தைகள் என்ற சுதந்திரத்தில் வாழ்வதற்கு நாம் அன்னைமரியிடம் வரம் கேட்போம்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.