2014-08-15 15:39:46

கொரிய நாட்டுத் திருப்பயணத்தின் இரண்டாம் நாள் - தெஜோன் நகரில் திருத்தந்தை


ஆக.15,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கொரிய நாட்டுத் திருப்பயணத்தின் இரண்டாம் நாளான ஆகஸ்ட் 15, கொரிய திருஅவைக்கும், அந்நாட்டிற்கும் முக்கியமான நாள். அன்னைமரியின் விண்ணேற்பு நாளும், கொரியக் குடியரசின் விடுதலை நாளும் இணைத்துக் கொண்டாடப்படும் இந்நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கிருப்பது அந்நாட்டுக் கத்தோலிக்கர்களுக்கு மகிழ்ச்சித்தரும் ஒன்றுதானே.
இவ்வாரம் வியாழனன்று காலை தென்கொரியாவில் தன் திருப்பயணத்தைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நாளில் கொரிய அரசுத்தலைவரையும், உயர்மட்ட அதிகாரிகளையும் அரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தபின், கொரிய ஆயர் பேரவை தலைமை இல்லத்தில் அந்நாட்டு ஆயர்களையும் சந்தித்து உரையாடினார். இத்துடன் அவரின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.
இரண்டாம் நாளான இவ்வெள்ளியன்று காலை, தெஜோன் நகரின் உலகக் கால்பந்தாட்ட மைதானத்தில் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றச் செல்வதே அவரின் பயணத்திட்டத்தின் முதல் பகுதி. நாட்டின் மையத்திலிருக்கும் தெஜோன் நகரம், கொரியாவின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமாகும். இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 15 இலட்சத்து 37 ஆயிரத்து 324பேர்.
தெஜோன் மறைமாவட்டத்தின் மக்கள்தொகையில் 8 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். இம்மரைமாவட்டத்தில் 26 கல்வி நிறுவனங்களையும் 54 பிறரன்பு நிறுவனங்களையும் நடத்திவருகிறது திருஅவை. கடந்த ஆண்டில் இம்மறைமாவட்டத்தில் 7266 திருமுழுக்குகள் இடம்பெற்றதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
செயோலிலிருந்து தெஜோனுக்கு திருத்தந்தை அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் செல்வதற்கு பயணத்திட்டம் இருந்த நிலையில், மேகமூட்டம் வானை மறைத்திருந்ததால் அதிவேக ரெயிலில் அந்நகருக்குப் பயணம் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த ரெயிலின் இரண்டு பெட்டிகள் திருத்தந்தையுடன் பயணம் செய்பவர்களுக்கென ஒதுக்கப்படிருந்தது. ரெயில் நிலையம் வந்த திருத்தந்தை, முதலில் அங்கு குழுமியிருந்த மக்களை நோக்கி கையசைத்து தன் வாழ்த்துக்களை வெளியிட்டார்.
ஏறத்தாழ 150 கிலோ மீட்டர்கள் ரயிலில் பயணம் செய்து, தெஜோன் நகரை வந்தடைந்த திருத்தந்தையை அப்பகுதி ஆயர் Lazzaro You Heung-sik அவர்களும் அந்நகர் அரசு அதிகாரிகளும் கூடியிருந்து வரவேற்றனர். உடனே, அங்கிருந்து உலகக் கால்பந்தாட்ட அரங்கிற்கு திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. ஜப்பானும் கொரியாவும் இணைந்து நடத்திய 2002ம் ஆண்டின் உலகக் கால்பந்து விளையாட்டையொட்டி கட்டப்பட்டது இந்த முட்டை வடிவ அரங்கு. இது 50,000 பேரை அமர்த்தும் வசதிகொண்டது. திருத்தந்தை கால்பந்து விளையாட்டரங்கிற்குள் நுழைய முயன்றபோது அங்கு கூடியிருந்த கூட்டத்திலிருந்து இருவர் இஸ்பானிய மொழியில் திருத்தந்தையை வாழ்த்தி சப்தமிட்டனர். ஆசிய இளையோர் சந்திப்பிற்கு வந்த இடத்தில், தன் தாய் மொழியைக் கேட்ட திருத்தந்தை, சிறிதுநேரம் நின்று அவர்களிடம் பேசினார். வடகொரிய நாட்டிற்காக செபிக்குமாறு அவர்களிடம் விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் மாத படகு விபத்தில் இறந்தவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலிக்கு வந்திருந்த, இவ்விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் 10 பேரை திருத்தந்தை தனியே சந்தித்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.
அந்த பத்து பேரில், Lee Ho-Jin என்பவரும் ஒருவர். இந்த படகு விபத்தில் இவர் மகன் Lee Seung-hyeon உயிர் இழந்தார். தன் மகன் மற்றும் இந்த படகு விபத்தில் உயிரிழ்ந்தவர்களின் நினைவாகவும், இந்த விபத்தைத் தொடர்ந்து அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருஅவை ஆற்றிய செயல்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் 900 கிலோமீட்டர் தூரம் ஒரு சிலுவையைச் சுமந்துகொண்டு திருப்பயணியாக இந்த திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருந்தார் Lee Ho-Jin. 62 வயதான Lee Ho-Jin அவர்கள், திருத்தந்தையை அணுகி, தான் திருமுழுக்குப்பெற 2 ஆண்டுகளாக தயாரித்து வருவதாகவும், திருத்தந்தையின் கையால் திருமுழுக்குப்பெற ஆவல் கொள்வதாகவும் தெரிவித்தார். திருத்தந்தையும் உடனே, மறுநாள் காலையில் திருப்பீடத்தூதரகத்தில் திருமுழுக்கு அருளடையாளத்தை தானே வழங்குவதாகத் தெரிவித்தார். திருத்தந்தை தனியாக சந்தித்த 10 பேரில் 3 பேர் கத்தோலிக்கரல்லாதோர்.
உலகக் கால்பந்தாட்ட அரங்கில் கூடியிருந்த மக்களிடையே திறந்த காரில் வலம்வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் வெள்ளி காலை 7 மணிக்குத் திருப்பலியைத் துவக்கினார். பல்வேறு பதட்டநிலைகள் உலகில் இடம்பெற்றுவரும் இன்றையச் சூழலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெஜோனில் நிறைவேற்றிய திருப்பலி, 'எழுந்திருங்கள். உலகின் ஒளியாகச் செயல்படுங்கள்' என்பதை மையம்கொண்டதாக இருந்தது.
கொரிய மொழியிலும் இலத்தீன் மொழியிலும் இடம்பெற்ற இத்திருப்பலியில், ஆசியத் திருஅவைப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். செயோல் கர்தினால் Andrew Yeon Soo-jung மணிலா கர்தினால் Louis Antony Tagle மும்பை கர்தினால் Oswald Gracias ஆகியோருடன் தென்கொரியாவின் அனைத்து ஆயர்களும் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர். இது தவிர, வியட்நாம், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகளின் அருள்பணியாளர்களும் கலந்துகொண்டனர். திருப்பலி மேடை அருகே நின்றிருந்த இரு சீன குருமாணவர்களிடம் திருப்பலிக்குப்பின் ஓரிரு நிமிடங்கள் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
திருப்பலியை நிறைவேற்றியபின், உள்ளூர் நேரம் 1 மணியளவில் அதாவது இந்திய நேரம் காலை 9.30 மணிக்கு 37 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தெஜோனின் உயர்குருருத்துவ இல்லம் நோக்கிச் சென்றார் திருத்தந்தை. அரைமணி நேரப் பயணத்திற்குப்பின் குருத்துவ இல்லம் வந்தடைந்த திருத்தந்தையை, அக்குருத்துவ இல்லத்தையும் உள்ளடக்கிய கத்தோலிக்க பல்கலைக்கழக வளாகத்தின் அதிபர் வரவேற்று, இளையோர் பிரதிநிதிகளைச் சந்திக்க முதல் தளத்திற்கு அழைத்துச் சென்றார். ஆசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோரின் பிரதிநிதிகள் 20க்கும் மேற்பட்டோரை இந்த சிறு அரங்கில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கேயே இளையோர் பிரநிதிகளோடு மதிய உணவருந்தி உரையாடி ஏறத்தாழ 3மணி நேரத்தை அவர்களோடுச் செலவிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.