2014-08-15 15:43:44

கொரிய நாட்டுத் திருப்பயணத்தின் இரண்டாம் நாள் - சொல்மோவே திருத்தலத்தில் திருத்தந்தை


மதிய உணவிற்குப் பிறகு, உள்ளூர் நேரம், பிற்பகல் 4.20 மணிக்கு தெஜோன் (Daejeon) விமானத்தளத்திற்கு திருத்தந்தை காரில் அழைத்துச் செல்லப்பட்டார். விமானத்தளத்திலிருந்து 43 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சொல்மோவே (Solmoe) திருத்தலத்திற்கு ஹெலிகாப்டரில் பயணமானார் திருத்தந்தை.
கொரியாவின் முதல் புனிதரென உயர்த்தப்பட்ட ஆன்ட்ரு கிம் தெஜோன் அவர்களின் பிறப்பிடமெனக் கருதப்படுவது, சால்மோவே. சால்மோவே என்ற சொல்லுக்கு, "ஊசி இலை மரங்கள் வளர்ந்த மலைக்காடு" என்பது பொருள். இங்கு நான்கு தலைமுறைகளாக வாழ்ந்த 'கிம்' மரபினரில், அருள்பணி ஆன்ட்ரு கிம் அவர்களின் முப்பாட்டனார், மாமா, தந்தை ஆகியோர் மறைசாட்சிகளாக உயிர் துறந்தனர். இவ்வரிசையில், இறுதியாக உயிர் துறந்தவர், ஆன்ட்ரு கிம். கொரியா நாட்டில் முதல் அருள் பணியாளராக திருநிலை பெற்ற ஆன்ட்ரு அவர்கள், 13 மாதங்களே அருள் பணியாற்றினார். அதன்பின்னர் 1846ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, தன் 25வது வயதில் மறைசாட்சியாக, உயிர் துறந்தார். ஆன்ட்ரு கிம் அவர்களையும், ஏனைய 99 மறைசாட்சிகளையும் புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் 1984ம் ஆண்டு புனிதர்களாக உயர்த்தினார். புனித ஆன்ட்ரு கிம் அவர்கள் இறந்ததன் 150ம் ஆண்டு நிறைவின்போது, சொல்மோவே திருத்தலம் நிறுவப்பட்டது.
புனித ஆன்ட்ரு கிம் அவர்கள் வாழ்ந்த இல்லம், சால்மோவே திருத்தலத்தில் ஒரு கோவிலாக விளங்குகிறது. இத்திருத்தலத்தை மாலை 5.15 மணிக்கு அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கோவிலில் சிறிது நேரம் செபித்தார். பின்னர், இத்திருத்தலத்தில் எழுப்பப்பட்டிருந்த கூடாரம் போன்ற ஓரிடத்தில் கூடியிருந்த 6000த்திற்கும் அதிகமான இளையோரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாலை 5.30 மணிக்குச் சந்திக்கச் சென்றார்.
திருத்தந்தை தோன்றியதும் அங்கு அளவுகடந்த ஆரவாரம் எழுந்தது. இளையோர் கூட்டம் பாடல்களோடு துவங்கியது. இந்தோனேசிய இளையோர் கலைநயம் மிக்க தங்கள் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தெஜோன் மறைமாவட்டத்தின் ஆயர், Lazzaro You Heung-sik அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். "வெகு தூரத்திலிருந்து வருகை தரும் நண்பரை வரவேற்பது உண்மையிலேயே பெருமகிழ்வைத் தரும்" என்று Confucius அவர்கள் கூறியுள்ள வார்த்தைகளை வைத்து, தன் வரவேற்புரையைத் துவக்கினார் ஆயர் You Heung-sik. "ஆசிய இளையோரே எழுக: மறைசாட்சிகளின் மகிமை உங்களில் ஒளிர்வதாக" என்ற விருதுவாக்கைக் கொண்டாட வந்திருக்கும் ஆசிய இளையோரையும் ஆயர் You Heung-sik அவர்கள் வரவேற்றார்.
தன் இளவயதிலேயே மறைசாட்சியாக உயிர் துறந்த புனித ஆன்ட்ரு கிம் அவர்களின் புனிதத்தலத்தில் கூடியிருக்கும் இளையோரை, மறைசாட்சிகளின் பரிந்துரையும், திருத்தந்தையின் ஆசீரும் வழிநடத்தும் என்ற நம்பிக்கையை, ஆயர் You Heung-sik அவர்கள் தன் வரவேற்புரையில் வெளிப்படுத்தினார்.
ஆயரின் வரவேற்பைத் தொடர்ந்து, கம்போடியா, ஹாங்காங், மற்றும் கொரியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த மூன்று இளையோர் திருத்தந்தையிடம் கேள்விகளை எழுப்பினர்.
கம்போடியாவிலிருந்து வந்திருந்த இளம்பெண், இறையழைத்தலை மேற்கொண்டு வாழ்வதா, அல்லது ஏழ்மையில் இருக்கும் தன் குடும்பத்தினருக்கும், கம்போடிய மக்களுக்கும் உதவும் வண்ணம் பணிகள் செய்வதா என்ற தன் போராட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், கொரியாவில் மறைசாட்சிகள் புனிதர்களாக உயர்த்தப்பட்டிருப்பதுபோல, கம்போடியாவில் கிறிஸ்துவுக்காக உயிர் துறந்தோர் புனிதர்களாக உயர்த்தப்பட வேண்டும் என்ற தன் ஆவலை திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார்.
ஹாங்காங்கிலிருந்து வந்திருந்த இளையவர், பன்னாட்டுக் கலாச்சாரங்கள் இணைந்துள்ள தன் நகரில், எவ்விதம் கிறிஸ்துவ வாழ்வின் அடிப்படையில் மற்றவர்களுக்கு மகிழ்வைக் கொணர்வது என்ற கேள்வியை எழுப்பினார்.
இறுதியாகப் பேசிய கொரிய நாட்டு இளம்பெண், வட, தென் கோரிய நாடுகளுக்கிடையே நிலவிவரும் பிரிவுகள் இளம் தலைமுறையினரை எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதைக் கூறி, இந்தப் பிரச்சனைக்கு திருத்தந்தை தரும் தீர்வு என்ன என்ற கேள்வியை எழுப்பினார்.
இளையோர் கேள்விகளை எழுப்பியபோது, அவற்றின் மொழிபெயர்ப்பைக் கவனித்துக் கேட்டபடி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்புக்களை எழுதிவந்தார். இளையோரின் கேள்விகளுக்கு அவர் அளித்த முக்கியத்துவத்தை இது உணர்த்துவதாக இருந்தது. இளையோரின் கேள்விகளுக்குப் பின், 'காணாமற்போன மகன்' அல்லது, 'கருணையுள்ள தந்தை' என்றழைக்கப்படும் உவமையை, கொரிய இளையோர் ஒரு சிறு நாடகமாக நடித்தனர்.
பின்னர், இக்கூட்டத்தின் சிகரமாக அமைந்த திருத்தந்தையின் உரை இடம்பெற்றது. 6வது ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த இளையோருக்கு திருத்தந்தை ஆங்கிலத்தில் வழங்கிய உரை, கொரிய மொழியிலும், கேட்கும் திறனற்றோருக்கு சைகை மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது.
தன் உரையின் நடுவில், தான் தயாரித்து வைத்திருந்த ஆங்கில உரையை ஒதுக்கி வைத்துவிட்டு, தன் மனதிலிருந்து இளையோரிடம் பேச விழைந்தார் திருத்தந்தை. ஆனால், ஆங்கிலத்தில் தன்னால் இயல்பாக, எளிதாகப் பேச முடியாது என்பதை இளையோரிடம் கூறியபின், தான் உள்ளத்திலிருந்து இத்தாலிய மொழியில் பேசுவதை கொரிய மொழியில் மொழிபெயர்க்க அருள் பணியாளர் ஒருவரின் உதவியைப் பெற்றார். அந்நேரத்தில், இளையோர் மூவர் எழுப்பிய கேள்விகளுக்கு தன் உள்ளத்திலிருந்து பதிலளித்தார் திருத்தந்தை.
கம்போடியாவில் புனிதர்கள் இல்லாத குறையை எடுத்துரைத்த இளம்பெண்ணின் ஆவலை நிறைவேற்றும் வகையில், தான் உரோமைக்குத் திரும்பியதும், கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்களிடம் பேசுவதாக திருத்தந்தை வாக்களித்தார்.
இருநாடுகளாகப் பிரிந்து துன்புறும் கொரியாவைப் பற்றி, கொரிய இளம்பெண் எழுப்பிய கேள்விக்கு, திருத்தந்தை பதிலளிக்கையில், தன்னைப் பொருத்தவரை, கொரியா ஒரே குடும்பம் என்றும், அது தற்போது இரண்டாகப் பிரிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இத்துன்பகரமான நிலைக்கு தான் தரவிழையும் ஒரே அறிவுரை, செபம் ஒன்றே என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைத்து இளையோரையும், தன்னுடன் இணைந்து வடகொரியாவுக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்தபின், அனைவரோடும் இணைந்து சில மணித்துளிகள் அமைதியில் செபித்தார்.

இந்த அமைதி செபத்திற்குப் பின், கொரியாவைப் பொருத்தவரை தான் கொண்டுள்ள நம்பிக்கையை வெளியிட்டார் திருத்தந்தை. வட, தென் கொரியாவில் ஒரே மொழி பேசப்படுவதால், இவ்விரு நாடுகளும் எளிதில் இணையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறினார் திருத்தந்தை.
இளையோரின் கேள்விகளுக்கு இவ்வாறு தன் மனம் திறந்து பதிலிறுத்தத் திருத்தந்தை, மீண்டும் தான் தயாரித்திருந்த ஆங்கில உரைக்குத் திரும்பி, அதனை நிறைவு செய்தார். உரையின் முடிவில், இளையோரை மீண்டும் ஞாயிறன்று சந்திப்பதாகக் கூறியத் திருத்தந்தை, அனைவருக்கும் ஆசீர் வழங்கினார்.
கூடியிருந்த அனைவரும் கரங்களை இணைத்து, "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே" என்ற பாடலை கொரிய மொழியில் பாட, இச்சந்திப்பு நிறைவுபெற்றது. கூட்டத்தின் இறுதியில், மேடையிலிருந்த சில இளையோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கைப்பேசியில் எடுக்கப்படும் 'Selfie' புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
இளையோரின் இச்சந்திப்பிற்குப் பின்னர், சியோல் நகருக்குத் திரும்பியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத் தூதரகத்தில் இரவுணவு அருந்தியபின், ஓய்வெடுக்கச் சென்றார். இவ்வாறு, திருத்தந்தை மேற்கொண்டுள்ள கொரியத் திருப்பயணத்தின் இரண்டாம் நாள் நிறைவுபெற்றது.

ஆதராம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.