2014-08-14 14:33:53

தென் கொரியா, ஒரு கண்ணோட்டம்


கிழக்கு ஆசியப் பகுதியில், கொரியத் தீபகற்பத்தில் அமைந்துள்ள கொரியா, 1948ம் ஆண்டில், வட கொரியா, தென் கொரியா என்ற இரு தனி நாடுகளாகப் பிரிந்தது. கொரிய மக்கள் தென்-மத்திய சைபீரியாவிலிருந்து குடியேறிய பழங்குடி இனத்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. கொரிய மக்கள் இரண்டாம் நூற்றாண்டில் சீன எழுத்து முறையை ஏற்றுக்கொண்டனர். இவர்கள் நான்காம் நூற்றாண்டில் புத்த மதத்தைத் தழுவினர். இவ்விரண்டு நிகழ்வுகளும் கொரிய வரலாற்றில் முக்கியப் பங்காற்றும், கொரிய முப்பேரரசில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தின. Joseon பரம்பரையினர் கொரியாவின் வரலாற்றில் பெரும் பாங்காற்றியுள்ளனர். 1910ம் ஆண்டில் ஜப்பானின் நாடுபிடிக்கும் கொள்கையினால் கொரியா, ஜப்பானுக்கு அடிமையானது. இரண்டாம் உலகப்போரின் முடிவுவரை ஜப்பானின் பிடியில் கொரியா இருந்தது. 1945ல் 38ம் அட்ச ரேகைக்கு வடக்கே சோவியத் யூனியனும், தெற்கே அமெரிக்க ஐக்கிய நாடும் ஜப்பான் படைகள் சரண் அடைந்ததை ஏற்றுக்கொண்டன. இந்த மிகச்சிறிய நிகழ்வு, கொரியாவின் பிரிவினையில் மிகப்பெரிய பங்காற்றியது. இரஷ்யாவும் அமெரிக்க ஐக்கிய நாடும், கொரிய விடுதலைக்குப்பின் அதை இரண்டாகப் பிரித்து அவர்களுக்கு ஏற்ற அரசுகளை பதவியில் வைத்து பனிப்போர் காலத்தில் மேலும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டன. கொரியக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் தென் கொரியா திறந்த பொருளாதரத்தைக் கொண்ட, சனநாயக முறையைக் கொண்ட வளர்ந்த நாடாகும். ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலக வர்த்தக கூட்டமைப்பு(WTO) G20 போன்ற பன்னாட்டு கூட்டமைப்புகளில் அங்கத்தினராகத் தன்னை பதிவு செய்துள்ளது. வடகொரியா அதிகாரபூர்வமாக ஜனநாயக மக்கள் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. இந்நாடு மூடிய பொருளாதாரக் கொள்கையுடையது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐந்து நாள்கள் திருப்பயணத்தை மேற்கொண்டுள்ள தென் கொரியக் குடியரசு, வடக்கே வட கொரியாவையும், மேற்கே சீனாவையும், கிழக்கே ஜப்பானையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கொரியத் தீபகற்பத்தில் கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள வளர்ந்த நாடாகிய தென் கொரியா, உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீட்டுப் பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது. மக்களின் சராசரி ஊதியம் என்று பார்த்தால், ஆசியாவில் முதல் இடத்தையும், உலகில் பத்தாவது இடத்தையும் இந்நாடு கொண்டுள்ளது. கல்வியிலும், நலவாழ்விலும், சட்டத்தைக் கடைப்பிடிப்பதிலும், தொழில்புரிவதிலும் ஒளிவுமறைவற்ற அரசியலிலும், வேலைப் பாதுகாப்பிலும், சகிப்புத்தன்மையிலும் உயர்வான இடத்திலே இந்நாடு வைக்கப்படுகின்றது. Samsung, Hyundai-Kia., L.G. போன்ற உயர்ந்த தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு, உலகில் ஏற்றுமதியில் ஏழாவது இடத்தில் உள்ளது தென் கொரியா. உலகில் அதிவேக இன்டர்னெட் தொடர்பு அமைப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடாகவும் அமைந்துள்ளது இந்நாடு. உலக அளவில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படாத சில வளர்ந்த நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. மணிக்கு 350 கிலோ மீட்டருக்குமேல் செல்லக்கூடிய இரயில்களும் இந்நாட்டில் உண்டு. தென் கொரியாவின் செயோல் Incheon பன்னாட்டு விமானநிலையம் உலகிலுள்ள மிகச் சிறந்த விமானநிலையம் என்று உலக விமானச்சேவை நிறுவனம் பாராட்டியுள்ளது. உலகிலுள்ள பெரிய மற்றும் சுறுசுறுப்பான விமானநிலையங்களில் ஒன்றாகவும் இது போற்றப்படுகிறது.

தென் கொரியாவில் Joseon பரம்பரை ஆட்சி செய்த காலத்தில் 1603ம் ஆண்டில் உரோமன் கத்தோலிக்கம் முதலில் பரவத் தொடங்கியது. Yi Gwang–jeong என்ற கொரியத் தூதர் பெய்ஜிங் சென்று திரும்பியபோது இயேசு சபை மறைப்பணியாளர் அருள்திரு மத்தேயோ ரிச்சி அவர்கள் எழுதிய இறையியல் நூல்களைக் கொண்டு வந்தார். அந்த நூல்களில் இருந்த செய்திகளை இவர் பரப்பத் தொடங்கியதன் மூலம் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. கத்தோலிக்கம் ஒரு தீய நடவடிக்கை என்று சொல்லி, 1758ம் ஆண்டில் Joseon அரசர் Yeongjo, கத்தோலிக்கத்தைத் தடை செய்தார். பின்னர் 1785ம் ஆண்டில் உரோமன் கத்தோலிக்கம் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. ஆயினும் 1801ம் ஆண்டிலிருந்து கொரியக் கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர்.1866ம் ஆண்டில் 9 ப்ரெஞ்ச் மறைபோதகர்கள் உட்பட எட்டாயிரம் கத்தோலிக்கர் கொல்லப்பட்டனர். இவர்களில் 103 மறைசாட்சிகள் 1984ம் ஆண்டில் மே மாதத்தில் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். இவர்களில் மேலும் 124 மறைசாட்சிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றனர்.
இவ்வாறு பல அடக்குமுறைகளுக்கு மத்தியில் வளர்ந்தது கிறிஸ்தவம். இன்று தென் கொரியாவில் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் 86 இலட்சமும், கத்தோலிக்கர் 53 இலட்சமும் உள்ளனர். தற்போது இந்நாட்டில் கிறிஸ்தவர்கள் 40 பல்கலைக்கழகங்கள் மற்றும் 293 பள்ளிகளை நடத்தி நாட்டின் கல்வி வளரச்சிக்குப் பெரிதும் உதவி வருகின்றனர்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.