2014-08-14 13:25:07

தென் கொரிய அரசுத் தலைவர், மற்றும் அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


ஆக.14,2014. அரசுத் தலைவரே, அரசு அதிகாரிகளே, ஏனைய நாட்டுத் தூதர்களே,
அதிகாலை அமைதிக்குப் புகழ்பெற்ற கொரியாவிற்கு வந்திருப்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. இந்நாட்டின் கலாச்சாரம் மிகவும் பழமையும், அழகும் மிக்கது. பல தடைகளையும், துன்பங்களையும் சந்தித்துள்ள நீங்கள் அமைதியையும், ஒற்றுமையையும் வளர்ப்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். அரசுத் தலைவரும், மற்றவர்களும் இணைந்து எனக்கு வழங்கிய வரவேற்பிற்கு என் மனம் கனிந்த நன்றி.
ஆறாவது ஆசிய இளையோர் நாளைக் கொண்டாட நான் இங்கு வந்துள்ளேன். உலகின் பல பகுதிகளிலிருந்து, குறிப்பாக, ஆசியாவின் பல நாடுகளிலிருந்து பல்லாயிரம் இளையோர் கலந்துகொள்ளும் சிறப்பு நாள் இது. இங்கு நான் வந்திருப்பதன் இரண்டாவது நோக்கம், Paul Yun Ji-chung அவர்களையும், அவருடன் சேர்ந்து 123 மறைசாட்சிகளையும் முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிப்பது.
இவ்விரு நிகழ்வுகளும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. முன்னோர்களை மதிக்கும் பண்பு, கொரிய கலாச்சாரத்தில் ஊறியிருக்கும் ஒரு பண்பு. அதேபோல், கத்தோலிக்கத் திருஅவையிலும் முன்னோர்களை மதித்து, அவர்களை புனிதர்களாகப் போற்றும் பாரம்பரியம் உள்ளது. நமது பாரம்பரியத்தில் எடுத்துக்காட்டுக்களாக வாழ்ந்தோரைக் கொண்டாடும் அதே வேளையில், வருங்காலத் தலைமுறையினரையும் நாம் கொண்டாடவேண்டும்.
நல்லதொரு, செறிவுமிகுந்த பாரம்பரியத்தை அடுத்தத் தலைமுறையினருக்கு வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பல்லாயிரம் இளையோர் கூடிவரும் வேளையில், அவர்களது ஏக்கங்களுக்கும், கனவுகளுக்கும் செவிமடுக்க வேண்டும். அவர்களுக்கு எத்தகைய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறோம் என்பது நம்முன் உள்ள பெரிய சவால். இன்றையச் சூழலில், அமைதி என்ற உன்னதப் பரிசை அடுத்தத் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்ல கடமைப்பட்டுள்ளோம்.
கோரிய தீபகற்பம் அமைதிக்காகப் போராடியுள்ளது. ஒப்புரவும், உறுதியான சமுதாயமும் இப்பகுதிக்கு அதிகம் தேவை. கொரியாவில் அமைதி நிலவுவது, இப்பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, போர்களால் களைத்துப் போயிருக்கும் இவ்வுலக மக்களுக்கும் முக்கியமானத் தேவையாக உள்ளது.
தேவையற்ற வாக்குவாதங்கள், ஆயுத பலத்தைப் பறைசாற்றும் கண்காட்சி போன்ற வழிகளைத் தவிர்த்து, அரசியல் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வது, இப்பகுதியின் அமைதியை உறுதிசெய்யும்.
போர் இல்லாத நிலையை அமைதி என்றழைக்க முடியாது. நீதியால் விளைவன (காண். எசா. 32:17) அமைதியை உறுதிசெய்யும். இறந்தக் காலக் காயங்களை மறந்து, ஒருவரையொருவர் மன்னித்து, ஒப்புரவு பெறுவதால் அனைவரும் பயனடைய முடியும்.
வளமான, அமைதியான முன்னேற்றத்தை உருவாக்க, தலைவர்களாகிய நீங்கள் உழைத்து வருகிறீர்கள். முன்னேற்றம் என்பது வெறும் பொருளாதார அடிப்படையில் மட்டும் தீர்மானிக்கப்படக் கூடாது. முழுமனித விழுமியங்களை உள்ளடக்கியதே உண்மையான முன்னேற்றம். மனிதகுலம் முழுமைக்கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் பொறுப்பாளர்கள் என்ற உணர்வுடன் முன்னேற்றப் பாதையை நாம் சிந்திக்கவேண்டும். சமுதாயத்தில் வலுவிழந்துள்ள வறியோர், வயது முதிர்ந்தோர் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் முன்னேற்றத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
"அறிவு மிகுந்த, புண்ணிய வாழ்வில் சிறந்த, ஆன்மீகத்தில் உயர்ந்த ஆண்களையும், பெண்களையும் கொண்டிருப்பதில்தான், கொரியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது" என்று 25 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டிற்கு வந்த புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறினார். அவரது கூற்றை உண்மையாக்கும் வண்ணம், இந்நாட்டிலுள்ள கத்தோலிக்கச் சமுதாயம் இளையோருக்குக் கல்வி வழங்குவதிலும், ஒதுக்கப்பட்டோருக்குப் பணியாற்றுவதிலும் அக்கறை கொண்டுள்ளது. சமத்துவம், நீதி, மன்னிப்பு, ஒப்புரவு என்ற உயரிய விழுமியங்களின் அடிப்படையில் வருங்காலத் தலைமுறையினரை உருவாக்க இந்நாடு கடமைப்பட்டுள்ளது.
நீங்கள் வழங்கிய வரவேற்பிற்கு நன்றி. கடவுள் உங்கள் அனைவரையும், குறிப்பாக, உங்கள் மத்தியில் இருக்கும் வயது முதிர்ந்தோரையும், இளையோரையும் சிறப்பாக ஆசீவதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.