2014-08-14 13:24:46

கொரிய ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


ஆக.14,2014. என் சகோதர ஆயர்களே,
உயிரோட்டமுள்ள கொரியத் தலத்திருஅவையை நேரடியாகக் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை ஓர் அசீராகக் கருதுகிறேன். இத்திருஅவையின் மக்களைக் காத்து வழிநடத்தும் பொறுப்பு, ஆயர்களாகிய உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இறைமக்களைக் காத்தல் என்பது, ஆயர்களாகிய உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான பொறுப்பு. காப்பது என்பதில் அடங்கியுள்ள இரு அம்சங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
முதல் அம்சம், நினைவுகளைக் காப்பது. Paul Yun Ji-chung மற்றும் அவருடைய தோழர்கள் அனைவரையும் முத்திப்பேறு பெற்றவர்களாக உயர்த்தும் இத்தருணத்தில், இத்தகைய மறைசாட்சிகள் வழியே, கொரியத் திருஅவை பெற்றுள்ள அளவற்ற அருளுக்காக நன்றி செலுத்துகிறோம். ஆயர்களாகிய நீங்கள், புகழ்மிக்க இந்தப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர்கள்.
பொதுநிலையினரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாலும், தாராள மனதுடன் அவர்கள் ஆற்றிய பணிகளாலும் கொரியத் திருஅவை வளர்ந்துள்ளது. இறைவார்த்தையுடன் நேரடித் தொடர்பு கொண்டதன் பலனாக இந்த வளர்ச்சி ஏற்பட்டது.
உங்கள் முன்னோர் இவ்வகையில் வளர்த்த திருஅவை, இன்று உயிரோட்டமுள்ள வகையில் பங்குத் தளங்களாகவும், பல்வேறு இயக்கங்களாகவும் வளர்ந்துள்ளது. மறைபரப்புப்பணிக்கு ஏற்ற ஒரு நாடாக, வேற்று நாடுகளிலிருந்து மறைப் பணியாளர்களை ஈர்த்துவந்த கொரியா, இன்று உலகெங்கும் மறைபரப்புப் பணியை ஆற்ற தன் மக்களை அனுப்பும் ஒரு நாடாகத் திகழ்கிறது.
நினைவுகளைக் காப்பது என்ற அம்சத்தில், பழங்கால வரலாற்று நினைவுகள் மட்டும் அடங்குவதில்லை. எதிர்கால கனவுகளும், நம்பிக்கையும் இதில் அடங்கும். கொரியத் திருஅவை உருவாக்கியுள்ள நிறுவனங்களைக் கொண்டு, அதன் மதிப்பு அளக்கப்படுவதில்லை; மாறாக, நற்செய்தியின் ஒளியில், கிறிஸ்துவை நோக்கி மனம் திரும்புவதில் இந்த மதிப்பு அடங்கியுள்ளது.
நினைவுகளைக் காப்பது என்பது, நமது முன்னோர்களின் விசுவாச வாழ்வில் பெருமை கொள்வதோடு நின்றுவிடுவதில்லை; மாறாக, தொடர்ந்து நாம் மனமாற்றம் பெற்று, கிறிஸ்துவை நெருங்கி வருவதில் அடங்கியுள்ளது.
நினைவுகளைக் காப்பது என்பதுடன், நம்பிக்கையைக் காப்பது, ஆயர்களின் காத்தல் பணியின் இரண்டாவது அம்சம். நம்பிக்கையைக் காத்து வளர்ப்பதற்கு, ஆயர்களாகிய நீங்கள், உங்கள் அருள் பணியாளர்களோடு ஒருங்கிணைந்து வாழ்வது அவசியம். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆற்றும் பணிகளில், புனிதத்தில் வளர அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
கொரியத் திருஅவை உலகெங்கும் சென்று மறைபரப்புப் பணியாற்ற தகுதி பெற்றது என்று சொல்லும்போது, சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோருக்குப் பணியாற்றுவதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும். விளிம்புகளில் வாழ்வோர் என்று சொல்லும்போது, குறிப்பாக, குழந்தைகளையும், வயது முதிர்ந்தோரையும் எண்ணிப் பார்க்கிறேன். வயது முதிர்ந்தோரை மறக்காமல் இருப்பது, நினைவுகளின் காவலர்களாக உங்களை மாற்றும் அதே வேளையில், குழந்தைகள் மீது கவனம் செலுத்துவது, நம்பிக்கையின் காவலர்களாக உங்களை மாற்றுகிறது. நன்னெறி விழுமியங்கள் நிறைந்த கிறிஸ்தவக் கல்வியைக் குழைந்தைகளுக்கு வழங்குவது, கொரியத் திருஅவையின் மிக முக்கியப் பணி.
நம்பிக்கையின் காவலர்களாக விளங்கும் நீங்கள், வறியோருக்கு ஆற்றும் பணிகளில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். 'வறியோரின்திருஅவை, வறியோருக்கான திருஅவை' என்ற உணர்வுடன் பணிசெய்த உங்கள் முன்னோரின் முயற்சிகளை மறவாமல், இன்றையச் சூழலில் வாழும் வறியோரை மையப்படுத்திய பணிகளை ஆற்ற நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
கடவுள் நம்பிக்கையற்ற, பொருளாசை கொண்ட இன்றைய உலகில், கொரியத் திருஅவை தன் வாழ்வையும், பணியையும் தொடரவேண்டும். செல்வம் கொழிக்கும் உலகப் போக்குகள், திருஅவையை வழிநடத்தும் சிந்தனைகளாக மாறும் சோதனைக்கு இடம் கொடுக்கக் கூடாது. கிறிஸ்துவின் சிலுவை என்ற மறையுண்மையை மறக்கும் அளவுக்கு மாற்று வழிகாட்டும் இவ்வுலக எண்ணங்களிலிருந்து நாம் விடுபடவேண்டும்.
மறைசாட்சிகளின் இரத்தத்தால் இந்தப் பூமியில் விதைக்கப்பட்ட கிறிஸ்தவ நம்பிக்கை, அன்னைமரியாவின் பரிந்துரையோடு, பல நூறு மடங்கு பெருகி பலன் தரட்டும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.