2014-08-13 16:17:19

"மோசுல் நகரின் கிறிஸ்தவர் ஒருவரைத் தத்தெடுப்பது" என்ற முயற்சிக்கு, முதுபெரும் தந்தை சாக்கோவின் நன்றி


ஆக.13,2014. ஈராக்கில் நடைபெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக, குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய ஆசிய செய்தி நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
இத்தகைய முயற்சிகள் ஒரு சங்கிலித் தொடராக உருமாறி, பல்வேறு தனிப்பட்ட மனிதர்களையும், அமைப்புக்களையும் உதவிக் கரம் நீட்டும் முயற்சியில் இணைக்கவேண்டும் என்ற தன் விண்ணப்பத்தை முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் வெளியிட்டுள்ளார்.
"மோசுல் நகரின் கிறிஸ்தவர் ஒருவரைத் தத்தெடுப்பது" (Adopt a Christian from Mosul) என்ற விருதுவாக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முயற்சியால் பல்லாயிரம் கிறிஸ்தவர்கள் பாதுக்காப்பு பெறுவர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இத்தகைய முயற்சிகளால் கிறிஸ்தவர்கள் ஈராக் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் சிறிதளவு குறைந்துள்ளது என்று குர்திஸ்தான் பகுதியின் ஆயர் Rabban Al-Qas அவர்கள் கூறினார்.
மோசுல் மற்றும் Qaraqosh பகுதிகளிலிருந்து விரட்டப்பட்டுள்ள பல்லாயிரம் கிறிஸ்தவர்கள், குர்திஸ்தான் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், அவர்களுக்கு தங்கள் மறைமாவட்டம் போர்கால அடிப்படையில் உதவிகள் செய்து வருவதாகவும் ஆயர் Al-Qas அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.