2014-08-13 16:11:11

திருத்தந்தை பிரான்சிஸ் : கொரியா மற்றும் ஆசியாவுக்காக என்னோடு சேர்ந்து செபியுங்கள்


ஆக.13,2014. இப்புதன் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு தென் கொரியாவுக்கான தனது திருப்பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரியா மற்றும் ஆசியாவுக்காகத் தன்னோடு சேர்ந்து செபிக்குமாறு அனைவரையும் கேட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று இவ்வாறு செபிக்கக் கேட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தி, வழக்கமாக வெளியிடப்படும் 9 மொழிகளுடன், பத்தாவது மொழியாக, கொரிய மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இப்புதன் காலை 11 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் மையத்தில் அமைந்துள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்று, தன் ஆசிய பயணத்திற்காக சிறப்பான முறையில் மரியன்னையிடம் வேண்டிவந்தார். பன்னாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதற்கு முன்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் செல்வதை ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உரோம் ஃபியுமிச்சினோ பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து இப்புதன் மாலையில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்தாலி நாட்டுப் பிரதமர் மத்தேயு ரென்சி அவர்கள் உட்பட பல அரசு பிரமுகர்களும், திருஅவைத் தலைவர்களும் வழியனுப்பினர்.
ஆல் இத்தாலியா A330 விமானத்தில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 11 மணி 30 நிமிடங்கள் பயணம் செய்து தென் கொரியத் தலைநகர் செயோலை, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்குச் சென்றடைவார். அப்போது இந்திய நேரம் வியாழன் காலை 7 மணியாக இருக்கும்.
6வது ஆசிய இளையோர் தினத்தில் கலந்து கொள்ளல், 124 கொரிய மறைசாட்சிகளை அருளாளர் நிலைக்கு உயர்த்துதல் ஆகியவை இப்பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். தமிழகம் உட்பட இந்தியாவிலிருந்து 46 பேர் ஆசிய இளையோர் தினத்தில் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.