2014-08-13 16:16:32

இஸ்லாமிய Caliphate அரசை உருவாக்கும் முயற்சியைக் குறித்து, திருப்பீட பல்சமய உரையாடல்கள் அவை கவலை


ஆக.13,2014. இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளைக் கொண்டு, Caliphate என்ற பெயரில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் முயற்சியைக் குறித்து, திருப்பீட பல்சமய உரையாடல்கள் அவை கவலை தெரிவித்துள்ளது.
தற்கால துருக்கியை உருவாக்கிய Kamal Ataturk என்ற இஸ்லாமியத் தலைவர், 1923ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி, Caliphate என்ற அமைப்பு முறையையும், எண்ணத்தையும் முற்றிலும் அழித்தார் என்பதைச் சுட்டிக்காட்டும் திருப்பீட அவை, இந்த முயற்சி தற்போது மீண்டும் வளர்வது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
Caliphate அரசை நிறுவ, இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் மேற்கொண்டு வரும் கொடுமையான வழிகளை, உலகில் அமைதியை விரும்பும் அனைத்து மதத்தவரோடும், அனைத்து நல்மனம் கொண்ட மனிதரோடும் இணைந்து தாங்கள் கண்டனம் செய்வதாக, திருப்பீட பல்சமய உரையாடல்கள் அவையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதத்தின் அடிப்படையில் மக்களை கூட்டம், கூட்டமாக வேட்டையாடி, கொல்வது, மதமாற்றம் செய்யவிரும்பாத கிறிஸ்தவர்கள் வரிசெலுத்தவோ, நாடுவிட்டு செல்லவோ கட்டாயப்படுத்தப்படுவது, கிறிஸ்தவப் பெண்களை, போர்களில் கிடைத்த பரிசாகக் கடத்திச் செல்வது ஆகிய செயல்கள் மனித குலத்திற்கே அவமானத்தை வருவிக்கும் செயல்கள் என்று திருப்பீட பல்சமய உரையாடல்கள் அவை தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மதத்தின் பெயரால், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினர் மேற்கொண்டுள்ள இந்தக் காட்டுமிராண்டித் தனமான செயல்பாடுகளை எதிர்த்துவரும் ஏனைய இஸ்லாமியக் குழுவினருக்கு திருப்பீட பல்சமய உரையாடல்கள் அவை தன் நன்றியைக் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.