2014-08-13 15:21:50

அமைதி ஆர்வலர்கள் – 1946ல் நொபெல் அமைதி விருது பெற்ற ஜான் மோட் (John R. Mott)


ஆக.13,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டவரான Emily Greene Balch, John R. Mott ஆகிய இருவரும் 1946ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்றவர்கள். பாஸ்டனில் பிறந்த Emily Greene Balch, பெண்களின் நலனுக்காகவும், உலகின் அமைதிக்காகவும் உழைத்தவர். கிறிஸ்தவரான John Raleigh Mott, Y.M.C.A என்ற இளம் கிறிஸ்தவர் மாணவர் இயக்கத்தின் செயலராக இருந்து அமைதிக்காகப் பல முக்கிய பணிகளை ஆற்றியிருப்பவர். ஜான் மோட், 1865ம் ஆண்டு மே 25ம் தேதி நியுயார்க்கில் பிறந்தவர். இவரது குடும்பம் Iowa மாநிலத்தின் Postvilleல் குடியேறியது. மர வியாபாரியான இவரின் தந்தை, Postville நகர மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்பத்தில் ஒரே ஆண் பிள்ளையாகிய ஜான் மோட் அவர்களுக்கு மூன்று சகோதரிகள். இவர் தனது 16வது வயதில் Iowa பல்கலைகழகத்தில் மாணவராகச் சேர்ந்தார். வரலாற்றிலும், இலக்கியத்திலும் ஆர்வமிக்க மாணவராகத் திகழ்ந்த இவர் பேச்சுப் போட்டிகளிலும் விவாதப்போட்டிகளிலும் விருதுகள் பெற்றார். 1885ம் ஆண்டில் Cornell பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, சட்டக்கல்வி படிப்பதா அல்லது தனது தந்தையின் மர வியாபாரத்தில் அவருடன் சேர்ந்து செயல்படுவதா என சிந்தித்தார். ஆயினும், 1886ம் ஆண்டு சனவரி 14ம் தேதியன்று பேராசிரியர் J. Kynaston Studd அவர்களின் சொற்பொழிவைக் கேட்ட பின்னர், இவர் தனது மனதை மாற்றிக் கொண்டார். Studd அவர்கள் உரையின் மூன்று வாக்கியங்கள், தனது வாழ்வு முழுவதும் மாணவர்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்கத் தூண்டின என ஜான் மோட் சொல்லியிருக்கிறார். உங்களுக்காகப் பெரிய காரியங்களைத் தேடுவானேன்? அவைகளைக் கைவிடுங்கள். கடவுளரசை முதலில் தேடுங்கள் ஆகிய மூன்றும்தான் இந்த வாக்கியங்கள்.
1886ம் ஆண்டு கோடையில் நடந்த அனைத்துலக முதல் இளையோர் கிறிஸ்தவ இயக்க மாநாட்டில், Cornell பல்கலைக்கழகப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார் ஜான் மோட். இது, பல்வேறு கிறிஸ்தவச் சபைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட முதல் இளையோர் கிறிஸ்தவ இயக்க மாநாடாகும். Y.M.C.A. என்றழைக்கப்படும் இந்த மாணவர் இயக்க மாநாட்டில், 89 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 250 பேர் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் ஜான் மோட் உட்பட நூறு ஆண்கள், வெளிநாட்டு மறைப்பணித்தளங்களில் பணி செய்வதற்கு உறுதி எடுத்தனர். இதற்கு இரு ஆண்டுகள் கழித்து, வெளிநாட்டு மறைப்பணித்தள தன்னார்வ மாணவர் இயக்கம் உருவானது. Cornell பல்கலைகழகத்தில் மோட் படித்த அடுத்த இரண்டாண்டுகளில் Y.M.C.A. மாணவர் இயக்கத்தின் தலைவராகச் செயல்பட்டார். இவ்வாண்டுகளில் இவ்வியக்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கானது. அப்பல்கலைகழகத்தில் Y.M.C.A. மாணவர் இயக்கத்திற்கு கட்டடம் கட்டுவதற்கும் நிதி திரட்டினார். 1888ம் ஆண்டில் மெய்யியல் மற்றும் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். அதோடு Phi Beta Kappa உறுப்பினருமானார். அதே ஆண்டு செப்டம்பரிலிருந்து 27 ஆண்டுகள், அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா ஆகிய இரு நாடுகளின் கல்லூரிகளின் Y.M.C.A செயலராகப் பணியாற்றினார். இப்பணியின்போது கல்லூரிகளுக்குச் சென்று கிறிஸ்தவ நடவடிக்கைகள் சார்ந்தவற்றில் மாணவர்களுக்கு உரையாற்றினார்.
இந்தப் பணிக்காலத்தில், வெளிநாட்டு மறைப்பணித்தள தன்னார்வ மாணவர் இயக்கத்தின் செயல்திட்டக் குழுவின் செயலராக இருந்தார் ஜான் மோட். 1910ம் ஆண்டில் எடின்பெர்கில் நடந்த உலக மறைப்பணி கருத்தரங்கின் அதிகாரியாக இருந்ததோடு, உலக மறைப்பணி அவையின் தலைவராகவும் இருந்தார். சுவீடன் நாட்டு Karl Fries என்பவருடன் சேர்ந்து 1895ம் ஆண்டில் உலக கிறிஸ்தவ மாணவர் கூட்டமைப்பை ஏற்படுத்தி, அதன் பொதுச் செயலராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றி, இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, ஐரோப்பா மற்றும் வட கிழக்குப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டு தேசிய மாணவர் இயக்கங்களைத் தொடங்கினார். 1912 மற்றும் 1913ம் ஆண்டுகளில் தூர கிழக்கு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் 21 மறைப்பணி கருத்தரங்குகளை நடத்தினார். 1915 முதல் 1928 வரை, அனைத்துலக Y.M.C.A. இயக்கத்தின் பொதுச் செயலராகவும், 1926 முதல் 1937 வரை அதன் தலைவராகவும் பணியாற்றினார். முதல் உலகப் போரில் Y.M.C.A. இயக்கம் சேவையாற்றியபோது, ஜான் மோட் அவர்கள், அரசுத்தலைவர் வில்சன் அவர்களுக்கு, தேசிய போர்ப்பணி அவையின் பொதுச் செயலரானார். இதில் ஆற்றிய சிறப்பான பணிக்காக விருதையும் பெற்றார் மோட். Y.M.C.A. இயக்கத்துக்குப் பன்னாட்டு அளவில் தொடர்புகளை ஏற்படுத்தி, அது பல்வேறு நாடுகளில் போர்க் கைதிகளுக்கு நிவாரணப் பணி செய்யும்படிச் செய்தார் மோட். அரசுத்தலைவர் வில்சன், சீனாவுக்கான தூதரகப் பணி செய்யும் பொறுப்பைக் கொடுத்தபோது அதை ஏற்க மறுத்த மோட், 1916ல் மெக்சிகோ குழுவுக்கும், 1917ல் இரஷ்யாவுக்கும் சிறப்புத் தூதராகவும் இருந்தார்.
ஜான் மோட், சில துறைகள் பற்றி 16 நூல்கள் எழுதியுள்ளார். அட்லாண்டிக் பெருங்கடலை நூறு தடவைகளுக்கு மேலும், பசிபிக் பெருங்கடலை 14 தடவைகளும் கடந்து ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். எண்ணற்ற கருத்தரங்குகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். இவ்வாறு ஐம்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு 34 நாள்கள் என, பெருங்கடல் பயணம் செய்துள்ளார். சீனா, செக்கோஸ்லோவாக்கியா, ஃபின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, ஜப்பான், எருசலேம், போலந்து, போர்த்துக்கல், சுவீடன், சியாம், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய பகுதிகளில் கவுரவ விருதுகளைப் பெற்றுள்ளார் மோட். ப்ரௌன், எடின்பெர்க், பிரின்ஸ்டன், டொரொன்ட்டோ, யால், அப்பர் இயோவா ஆகிய பல்கலைகழகங்களிலும், பாரிசிலுள்ள இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையிலும் கவுரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார் இவர். 1946ல் நொபெல் அமைதி விருதையும் பெற்றார் ஜான் மோட். 1891ம் ஆண்டில் திருமணம் முடித்து நான்கு பிள்ளைகளுக்கும் தந்தையானார் ஜான் மோட். இவர் தனது 94வது வயதில், ஃப்ளாரிடா மாநிலத்தின் ஒர்லான்டோவில் தனது வீட்டில் காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.