2014-08-12 14:56:07

புனிதரும் மனிதரே - "நாங்கள் சேர்த்து வைத்துள்ள செல்வங்கள், வறியோரே"


"நீங்கள் சேர்த்துவைத்துள்ள செல்வம் எங்கே?" என்று உரோமைய ஆளுநர் ஒருவர் கோபத்தில் கத்தினார். அவருக்கு முன் கைதியாக நின்ற இலாரன்ஸ் என்ற இளைஞர், "எந்தச் செல்வத்தைப் பற்றி கேட்கிறீர்கள்?" என்று பதில் கேள்வி கேட்டார். "உங்கள் கோவிலில் நீங்கள் திரட்டிவைத்துள்ள தங்கம், வெள்ளி ஆகிய செல்வங்கள் எங்கே?" என்று ஆளுநர் மீண்டும் கத்தினார்.
அந்த உரோமைய ஆளுநர், புனிதத் திருத்தந்தை 2ம் சிக்ஸ்துஸ் அவர்களையும் அவருக்குப் பணியாற்றிய 6 தியாக்கோன்களையும் கொலை செய்தவர். ஆனால், தியாக்கோன் இலாரன்ஸை அவர் கொல்லவில்லை. காரணம்.... இலாரன்ஸ்தான் கோவில் சொத்துக்களின் கணக்கு வழக்குகளை பராமரித்தவர். எனவே, அவரிடமிருந்து சொத்துக்களைப் பறித்துக்கொண்டபின் அவரைக் கொலைசெய்ய ஆளுநர் திட்டமிட்டிருந்தார்.
"எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் தாருங்கள். நாங்கள் திரட்டியுள்ள சொத்துக்களை உங்கள் முன் கொணர்கிறேன்" என்று தியாக்கோன் இலாரன்ஸ் அவர்கள் கூறினார். ஆளுநரும் அவருக்கு விடை கொடுத்தார்.
மூன்றாவது நாளன்று, தியாக்கோன் இலாரன்ஸ் அவர்கள், ஆளுநர் இல்லம் நோக்கிச் சென்றபோது, அவருக்குப்பின், அவ்வூரில் இருந்த பல நூறு வறியோர், நோயுற்றோர் அனைவரும் சென்றனர். தியாக்கோன் இலாரன்ஸ் அவர்கள், கோவிலில் இருந்த பல விலையுயர்ந்த பாத்திரங்கள், மெழுகுதிரி தண்டுகள், தூபக் கலசங்கள் ஆகியவற்றை ஏழைகளுக்குக் கொடுத்து உதவியதாகச் சொல்லப்படுகிறது. இளைஞர் இலாரன்ஸ் ஆளுநரிடம், "ஆளுநரே, இதோ நாங்கள் சேர்த்து வைத்துள்ள செல்வங்கள்" என்று தன் பின்னே நின்ற மக்களைச் சுட்டிக்காட்டினார்.
இதனால் வெகுண்டெழுந்த ஆளுநர், தியாக்கோன் இலாரன்ஸ் அவர்களை, கொடிய வேதனைகளுக்கு உட்படுத்தி கொலை செய்தார். புனித இலாரன்ஸ் அவர்களின் திருநாள், ஆகஸ்ட் 10ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.