2014-08-12 15:29:34

ஈராக்கிலுள்ள எண்ணெய்க் கிணறுகளைக் காப்பதே அமெரிக்க ஐக்கிய நாட்டின் நோக்கம் - முதுபெரும் தந்தை சாக்கோ


ஆக.12,2014. ஈராக்கிலுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தலைமை இடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நோக்கம், குர்திஸ்தான் தலைநகரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே எனத் தெரிவதாக, தன் கவலையை வெளியிட்டுள்ளார், பாக்தாத் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.
Mosul மற்றும் Qaragosh நகர்களிலிருந்து கிறிஸ்தவர்கள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்படுவது குறித்து கவலையின்றி, குர்திஸ்தான் தலைநகர் Erbilஐக் காப்பாற்ற முயல்வது, அங்குள்ள எண்ணெய்க் கிணறுகள் மீது அமெரிக்க ஐக்கிய நாடு கொண்டுள்ள அக்கறையாலேயே என்றும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் குறை கூறியுள்ளார்.
ISIS எனும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவால் நடத்தப்படும் வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் தடுப்பதாக அல்லாமல், பதட்டநிலைகளைக் குறைக்கும் முயற்சியாகவே அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களின் நோக்கம் தெரிகின்றது என்று கூறினார், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள்.
எண்ணெய் கிணறுகளைக் காப்பதில் காட்டும் ஆர்வத்தை, நாட்டின் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியரிடையே உருவாகியுள்ள இன வேறுபாடுகளைக் களைந்து, நாட்டை ஒருங்கிணைப்பதில் அமெரிக்க அரசு காட்டவேண்டும் என்ற விண்ணப்பத்தை, முதுபெரும் தந்தை சாக்கோவுடன் இணைந்து, இஸ்லாமிய உயர் தலைவர் ஒருவரும் விடுத்துள்ளார்.
ஈராக்கின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதி, அமெரிக்க ஐக்கிய நாடு தற்போது காப்பாற்ற முயலும் Erbil நகரில் கிட்டுகிறது என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.