2014-08-12 15:39:53

இலங்கையில் காணாமல் போனவர் பற்றிய அரசு விசாரணைக் குழுவின் செயல்பாடுகள் வெறும் கண்துடைப்பே, ஆயர் ஜோசப்


ஆக.12,2014. உள்நாட்டு போர்க்காலத்தின்போது காணாமல்போனவர்கள் குறித்து விசாரிக்கும் இலங்கை அரசுத்தலைவரின் விசாரணை அவை வெறும் கண்துடைப்பே என உரைத்துள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்.
காணாமல்போனவர்கள் குறித்த விசாரணைகளில் தங்கள்முன் தோன்றி சாட்சியம் வழங்கவேண்டும் என விசாரணைக்குழு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துள்ள ஆயர் ஜோசப், இத்தகைய குழுக்களின் கடந்தகால விசாரணைகள் வெறும் கண்துடைப்பாகவே மாறியுள்ள நிலையில், தற்போதைய குழுவின்முன் சாட்சியம் வழங்குவதில் பலன் இருக்கும் என, தான் நம்பவில்லை என அரசுத்தலைவர் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதில் அரசுக்கு எவ்வித ஆர்வமும் இருப்பதாகத் தெரியவில்லை என தன் செய்தியில் கூறியுள்ள மன்னார் ஆயர், இக்குழுவின் முயற்சிகள், இங்கு சாட்சி கூற வருபவர்களுக்கு உதவுவதாக அல்லாமல், அவர்களின் பொருளாதார நிலைகள் குறித்து ஆய்வு செய்வதாகவே உள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உண்மை மற்றும் நீதி மீதான தீவிர அர்ப்பணமின்றி ஒப்புரவை ஒருநாளும் பெறமுடியாது என்பது மட்டுமல்ல, அமைதியும் வெறும் கானல் நீராகவே இருக்கும் எனவும், காணாமல்போனவர்கள் பற்றிய விசாரணைக்குழுவுக்கான தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆயர் ஜோசப்

ஆதாரம் : MISNA








All the contents on this site are copyrighted ©.