2014-08-12 15:31:36

இம்மாதம் 17ம் தேதி அமெரிக்காவில் ஈராக் கிறிஸ்தவர்களுக்கான செப நாள்


ஆக.12,2014. உலகம் முழுவதும் மதக்காரணங்களுக்காக சித்ரவதைப்படுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக, குறிப்பாக ஈராக் கிறிஸ்தவர்களுக்காக ஒன்றிணைந்து செபிக்கும் நாளை அறிவித்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.
ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை எழுதிய செபத்தின் துணையுடன் அமெரிக்க ஐக்கிய நாடு முழுவதும் ஒன்றிணைந்து இம்மாதம் 17ம் தேதி ஞாயிறை, துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு செபிக்கும் நாளாக சிறப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.
இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த அமெரிக்க ஆயர்களின் அனைத்துலக நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் ஆயர் Richard Pates, ஒவ்வொரு அமெரிக்க கத்தோலிக்கரும் தங்கள் பகுதி செனட் அவை அங்கத்தினர்களிடம் உலகின் பல பகுதிகளில் மதக்காரணங்களுக்காக மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
உலகம் முழுவதும் துன்பங்களை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்நாளில், உண்ணா நோன்பை மேற்கொள்வதுடன், துன்புறும் கிறிஸ்தவர்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் அமெரிக்க ஆயர்கள் கத்தோலிக்கர்களை விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : EWTN








All the contents on this site are copyrighted ©.