2014-08-11 16:08:54

புனிதரும் மனிதரே : செபத்தால் பகைவர்களை விரட்டியவர்(St Clare of Assisi)


திருப்பீடச் சொத்தின் ஒரு பகுதியாக இருந்த இத்தாலியின் ஸ்போலெத்தோ பள்ளத்தாக்கில், பேரரசர் இரண்டாம் Frederickன் படைகள் 1244ம் ஆண்டில் போரிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவரது படையின் ஒரு பிரிவினர் அசிசி நகரைத் தாக்குவதற்குத் தயாரானார்கள். அசிசி நகரின் மதில் சுவரக்ளுக்கு வெளியே அமைந்திருந்த புனித தமியான் ஆலயம் அவர்களின் தாக்குதலின் முதல் இலக்காக இருந்தது. அந்த ஆலயத்தை அவர்கள் சுற்றிவளைத்தபோது அதற்குள் வாழ்ந்த புனித கிளாரா அடைபட்ட துறவு சபை அருள்சகோதரிகள் மிகவும் அஞ்சினார்கள். அச்சமயத்தில் அவ்வில்லத்தின் தலைவராக இருந்த அருள்சகோதரி கிளாரா உடல்நலமின்றி இருந்தார். இருந்தபோதிலும் தனது உடன் அருள்சகோதரிகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, "ஆண்டவரே, பாதுகாப்பற்ற உம் அன்புப் பிள்ளைகளாகிய எங்களை, இந்த விலங்குகள் பிடியினின்று காப்பாற்றும், என்னால் என் சகோதரிகளைக் காப்பாற்ற முடியாது" என்று திருநற்கருணையின் முன்பாக மண்டியிட்டுச் சப்தமாகச் செபித்தார். அப்போது, "நான் அவர்களை எப்போதும் எனது அரவணைப்பிலே வைத்திருப்பேன்" என்று, ஒரு சிறு குழந்தையின் குரல்போன்ற ஒலியைக் கேட்டார் கிளாரா. மீண்டும் கிளாரா அச்சி நகரத்திற்காகவும், தங்களுக்காகவும் செபித்தார். அவர் மீண்டும் அந்தக் குரலைக் கேட்டார். பின்னர் நடுங்கிக்கொண்டிருந்த அருள்சகோதரிகள் பக்கம் திரும்பி, "அஞ்சாதீர்கள், இயேசுவில் நம்பிக்கை வையுங்கள்" என்று கூறினார். பின்னர் ஓர் ஏணியின் உதவியுடன் அவ்வில்லச் சுவரில் ஏறி, பகைவர்கள் காணும்படி அதில் திருநற்கருணையை வைத்தார். அந்நேரத்தில் திடீரென பேரச்சம் அப்பகைவர்களை ஆட்கொள்ள, அனைவரும் அவ்விடத்தைவிட்டு ஓடிவிட்டார்கள். இவ்வாறு செபத்தால் பகைவர்களை விரட்டியவர் அசிசி நகர் புனித கிளாரா. இவர் தனது 18வது வயதில் அசிசி நகர் புனித பிரான்சிசின் மறையுரையைக் கேட்டு துறவு பூண்டவர். புனித கிளாரா 1253ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி காலமானார். இவர் தொடங்கிய துறவு சபை, ஏழைகளின் கிளாரா சபை என அழைக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.