2014-08-11 16:25:38

திருத்தந்தை : நமது விசுவாசம் உறுதியற்றதாக இருந்தாலும் அது எப்போதும் வெற்றியடையக்கூடியது


ஆக. 11, 2014. நமது விசுவாசம் உறுதியற்றதாக இருந்தாலும் அது எப்போதும் வெற்றியடையக்கூடியது மட்டுமல்ல, எத்தனை புயல்கள் மற்றும் துன்பங்கள் மத்தியிலும் இயேசுவை நோக்கியே நடந்துச் செல்ல வல்லது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் கூறப்பட்டுள்ள, இயேசு கடல்மீது நடந்த புதுமை குறித்து நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் அழைப்பை ஏற்று, கடல்மீது காலடி எடுத்து வைத்த பேதுரு, இயேசுவிடமிருந்து தன் பார்வையை விலக்கும்போது, கடலில் மூழ்கும் நிலைக்கு வருகிறார், ஆனால் இயேசுவோ அவரை ஆபத்திலிருந்துக் காப்பாற்ற அருகிலேயே இருக்கிறார் என்றார்.
புயலால் கவிழவிருக்கும் படகைக் காப்பது அதில் பயணம் செய்யும் மனிதர்களின் தரமோ அல்லது வீரமோ அல்ல, மாறாக நம்மை இருளிலும் சிரமங்கள் மத்தியிலும் நடக்கவைக்கும் விசுவாசமேயாகும் எனவும் எடுத்தியம்பினார் திருத்தந்தை.
நம்முடன் படகில் நம் இறைவன் இருக்கும்போது, அங்கு நம் குறைபாடுகளையும் பலவீனங்களையும் தாண்டி நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனை எப்போது வணங்கி ஆராதிக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என மேலும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புயல் ஓய்ந்ததும் படகில் இருந்தவர்கள் கிறிஸ்துவை வணங்கி 'உண்மையில் நீரே இறைமகன்' என எடுத்தியம்பியதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.