2014-08-11 16:25:51

திருத்தந்தை : ஈராக்கிலும் காசா பகுதியிலும் இடம்பெறும் வன்முறைகள், இறைவனையும் மனிதகுலத்தையும் காயப்படுத்துகின்றன


ஆக. 11, 2014. ஈராக்கிலும் காசா பகுதியிலும் இடம்பெறும் வன்முறைகள், இறைவனையும் மனிதகுலத்தையும் காயப்படுத்துபவைகளாக உள்ளன என தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பகைமையும் போரும் எக்காலத்திலும் இறைவனின் பெயரால் நடத்தப்படக்கூடாது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய கிழக்குப் பகுதியில் போரால் துன்புறும் மக்களுக்காக, குறிப்பாக பசியால் வாடும் குழந்தைகள், வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் ஆகியோருக்காக ஒரு நிமிடம் அமைதியில் செபிப்போம் எனவும் அழைப்பு விடுத்தார்.
துன்புறும் மக்களுக்கு துணிவுடன் உதவிகளை ஆற்றும் அனைவருக்கும் தன் நன்றிகளையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காசா பகுதியில் இடம்பெறும் போர் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பாவி மக்களையே பழிவாங்கிவரும் இத்தகைய போர்கள், இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளை அதிகரிக்க உதவுமேயொழிய வேறொன்றிற்கும் உதவாது என்றார்.
இவ்வாரம் புதன் முதல் வரும் திங்கள் வரை தென்கொரியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்தும் தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் செபத்தோடு அனைவரும் தன்னோடு பயணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.