2014-08-11 16:26:06

'ஆசிய இளைஞர்களே எழுந்திருங்கள், மறைசாட்சிகளின் மகிமை உங்கள்மேல் ஒளிர்விடுகின்றது'


ஆக. 11, 2014. கொரிய சமூகத்திற்கும் திருஅவைக்கும் தன் இவ்வாரத் திருப்பயணம் நல்கனிகளைக் கொணரவேண்டும் என தன்னோடுச் சேர்ந்து கொரிய மக்கள் அனைவரும் செபிக்கவேண்டும் என அந்நாட்டு மக்களுக்கு ஒலி-ஒளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆறாவது ஆசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கொரிய நாட்டிற்கு வரும் நான், 'ஆசிய இளைஞர்களே எழுந்திருங்கள், மறைசாட்சிகளின் மகிமை உங்கள்மேல் ஒளிர்விடுகின்றது' எனக்கூற ஆவல் கொள்கின்றேன் என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 16ம் தேதி கொரியாவில், இறையடியார் பால் யுன் சி-சுங் மற்றும் அவரின் 123 உடனுழைப்பாளர்களை அருளாளர்களாக அறிவிக்க உள்ளதையும் எடுத்துரைத்துள்ளார்.
வருங்காலத்தின் நம்பிக்கை மற்றும் சக்தியாக இருக்கும் இளையோர், நம் காலத்தின் ஆன்மீக மற்றும் ஒழுக்கரீதி நெருக்கடிகளின் பலிக்கடாக்களாகவும் மாறிவருகிறார்கள் என்ற கவலையையும் வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதிலிருந்து நம்மையெல்லாம் மீட்கவல்ல ஒரே பெயர் கிறிஸ்துவே எனவும் கூறியுள்ளார்.
முதியோருக்கும் இளையோருக்கும் இடையே நிலவவேண்டிய நல்லுறவுகள் பற்றியும் எடுத்துக்கூறி, மனித குல பாதையை நடைபோட வைப்பது இந்த நல்லுறவே என மேலும் தன் ஒலி-ஒளிச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.